கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.


பூதாகாரமாக வெடித்த மதுரா மசூதி சர்ச்சை:


ஏற்கனவே, அயோத்தி வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரா மசூதி வழக்கு பூதாகாரமாக வெடித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் ஷாஹி இத்கா மசூதி அமைந்திருக்கும் இடத்தில் பகவான் கிருஷ்ணர் பிறந்ததாக இந்துகள் நம்புகின்றனர்.


எனவே, மசூதி அமைந்திருக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இந்து அமைப்புகள் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆய்வு மேற்கொள்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய தரப்பு ஆட்சேபனை தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கியது.


அனுமதி வழங்கியது மட்டும் இன்றி, ஆணையம் ஒன்றை அமைத்து, அதற்கு தலைவராக வழக்கறிஞர் ஒருவரை நியமித்து அவரின் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டது. ஆணையத்தின் மற்ற தகவல்கள், வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என உத்தரவிட்டது.


இஸ்லாமிய தரப்புக்கு பெரும் பின்னடைவு:


இச்சூழலில், ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.


இதுகுறித்து இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை வரும் ஜனவரி 9ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும். உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை" என்றார்.


கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் 13.37 ஏக்கர் நிலம், தனக்கு சொந்தம் எனக் கோரி லக்னோவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஷாஹி இத்கா மசூதியை இடிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


கடந்த 1669-70களில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு அருகில் உள்ள கத்ரா கேசவ் தேவ் கோயிலின் 13.37 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ மேற்கோள் காட்டி, ரஞ்சனா அக்னிஹோத்ரியின் மனுவை நிராகரிக்க இஸ்லாமிய தரப்பு கோரிக்கை விடுத்தது.