ஜிதேந்திர கோகி என்ற ரவுடியை கொலை செய்ததற்காக ரவுடி தில்லு தாஜ்பூரியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மே 2ஆம் தேதி, தாஜ்பூரியை, சிறையில் இருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டே சிலர் கொலை செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.


திகார் ஜெயிலில் ரவுடி படுகொலை:


இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிராளி குழு சேர்ந்து, தில்லு தாஜ்பூரியாவை கிட்டத்தட்ட 90 முறை கத்தியால் குத்தி கொலை செய்தது அதில் பதிவாகியது. இதையடுத்து, படுகாயம் அடைந்த அவரை, நான்கு காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து தூக்கி செல்வதும் பதிவாகியிருந்தது.


ஆனால், திடீரென, தில்லு தாஜ்பூரியாவை இரண்டு பேர் மீண்டும் தாக்க தொடங்கியுள்ளனர். தில்லு தாஜ்பூரியா தாக்கப்படுவதை தடுக்காமல் அந்த காவல்துறை அதிகாரிகள் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். தில்லு தாஜ்பூரியாவின் உடலில் 100 இடங்களில் காயங்கள் இருந்தன. பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில்தான், அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது.


சம்பவம் நடந்தபோது, தில்லு தாஜ்பூரியா அடைக்கப்பட்டிருந்த சிறையில் காவலுக்காக நின்று கொண்டிருந்தவர்கள் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவை சேர்ந்த ஏழு அதிகாரிகள் ஆவர். கொலை சம்பவம் நடந்தபோது, அதை அமைதியாக பார்த்து கொண்டிருந்த தமிழ்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள், தமிழ்நாட்டுக்கே அனுப்பப்பட உள்ளனர்.


தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி:


இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த ஏடிஜிபி எச்.எம். ஜெயராம் இன்று திகார் சிறைக்கு செல்கிறார்.


இந்த விவகாரத்தில், திகார் சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம், சிறை நிர்வாகம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறை கண்காணிப்பாளரை நேரில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிபதி சரமாரி கேள்வி:


வழக்கின் விசாரணையின்போது பேசிய நீதிபதி ஜஸ்மீத் சிங், "இந்த சம்பவம் சிறைக்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானால், அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறை வளாகத்தில் கத்திகள் எப்படி வந்தன" என கேள்வி எழுப்பியிருந்தார்.


இந்த கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் தாஜ்பூரியாவின் தந்தை மற்றும் சகோதரர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி காவல்துறையிடம் நீதிபதி ஜஸ்மீத் சிங் கேட்டுக் கொண்டார்.