இந்திய மசாலாப் பொருட்களில் கோமியம் மற்றும் பசுவின் சாணம் இருப்பதாகக் குற்றம் சாட்டி, ‘கேட்ச்’ உள்ளிட்ட முக்கிய பிராண்டுகளை குறிவைத்து, யூடியூபில் உள்ள “அவதூறு” வீடியோக்களை நீக்குமாறு 'கூகுள் எல்எல்சி'க்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குவதும் பதிவேற்றுவதும் ‘கேட்ச்’ முத்திரையைக் கொண்ட தயாரிப்புகள் மீது வேண்டுமென்றே இழிவுபடுத்தும் முயற்சி என்று நம்புவதாக உயர் நீதிமன்றம் கூறியது.


வழக்கு தொடர்ந்த மசாலா நிறுவனம்


அனைத்து இந்திய மசாலாப் பொருட்களிலும் கோமியம் மற்றும் மாட்டுச் சாணம் உள்ளதாகக் கூறி, அதன் பிராண்ட் உட்பட மசாலாப் பொருள்களை வர்த்தகம் செய்யும் முக்கிய பிராண்டுகளை குறிவைத்து வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து தரம்பால் சத்யபால் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. அதன் தயாரிப்புகள் குறித்து அவதூறான மற்றும் இழிவான அறிக்கைகளை வெளியிடும் வீடியோக்கள் காண்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. உயர் நீதிமன்றம் வாதிக்கு ஆதரவாகவும், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சேனல்களுக்கு எதிராகவும் வழக்கை தீர்ப்பளித்தது மற்றும் வீடியோக்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறியது.



பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை பரப்புதல்


"யூடியூப் வீடியோக்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆய்வு செய்தபோது, வாதியின் நிறுவனத்தின் மீது (தரம்பால் சத்யபால் சன்ஸ் பிரைவேட் லிமிடெட்) தவறான எண்ணங்களை ஏற்படுத்துவதன் மூலம், பொதுமக்களிடையே நம்பிக்கையை குலைக்க வழிவகுப்பது தெரிகிறது. யூட்யூப் போன்ற இணையம் எளிதாக, எந்தவித கட்டுப்பாடும் இன்றி மக்களை சென்று அடைவதால், சந்தேகத்திற்கு இடமின்றி அதிக மக்களை சென்றடைந்து, பலரால் பகிரப்பட வாய்ப்புள்ளது, "என்று நீதிபதி சஞ்சீவ் நருலா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: The Kerala Story Review: நீண்ட நெடிய வெறுப்பு பிரச்சாரம்... ஆதாரமற்ற வாட்ஸப் ஃபார்வட் மெசேஜ்களின் தொகுப்பு... தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!


கூகுள் நிறுவனம் எடுத்த நடவடிக்கை


கூகுள் நிறுவனத்தின் ஆலோசகர், அதன் முந்தைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இனி அந்த மூன்று வீடியோக்களையும் பார்க்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றம் சாட்டபட்ட TYR மற்றும் Views NNews ஆகிய இரண்டு சேனல்களும் இந்திய மசாலாப் பொருட்களுக்கு எதிராக, குறிப்பாக வாதியின் ‘கேட்ச்’ பிராண்டின் கீழ் விற்கப்படும், பொருட்கள் குறித்து, அவதூறான, உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கொண்ட வீடியோக்களை தீங்கிழைக்கும் வகையில் பதிவேற்றியதாக உயர் நீதிமன்றம் கூறியது.



கேட்ச் தயாரிப்புகள் குறித்து நீதிமன்றம்


'கேட்ச்' என்ற பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையின் கீழ் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் தயாரிப்புகளின் மீது செய்யப்படும் அவதூறு மற்றும் அவமதிப்புக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி வாதி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வந்தது. நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாகவும், அதன் மசாலாப் பொருட்களுக்கு நேர்த்தியான சுவைகள் மற்றும் நறுமணத்துடன் இருப்பதாகவும் கூறியது. மேலும் தரம் மற்றும் சுகாதாரத்தில் மிக உயர்ந்த தரத்தை வழங்குவதாகவும், வழக்கமான தர சோதனைகளை நடத்திய பின்னரே விற்பனை செய்வதாகவும் கூறினர். “வாதிகள் தங்கள் தயாரிப்புகள்/ மசாலாப் பொருட்களில் அடங்கியுள்ள பொருட்களின் பட்டியலை பதிவில் பதிவு செய்துள்ளார், அவை பதியப்பட்ட வீடியோக்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்தும் சான்றிதழைப் பெற்றுள்ளனர் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து சுயாதீனமான உணவுப் பகுப்பாய்வின் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர், அவை மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீர் அல்லது பிற அசுத்தங்கள் இருப்பதைக் குறிக்கவில்லை," என்றும் தெரிவிக்கப்பட்டது