டிக்டாக் புகழ்
ஜம்மு காஷ்மீரில் 35 வயதான பிரபல டிக்டாக் புகழ் அம்ரீன் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லைப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் அவரின் 10 வயது மருமகன் ஃபர்ஹான் ஜுபைரும் காயமடைந்தார்.
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் (35). கடந்த இரண்டு ஆண்டுகளாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து பிரபலமானவர் இவர். டிக் டாக் தடை செய்யப்பட்ட போதிலும் காஷ்மீர் முழுவதும் மிகவும் அறியப்பட்டு இருந்தார் அம்ரீன்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு 7.55 மணியளவில், அம்ரீன் பட் என்ற பெண்மணியின் வீட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். காயமடைந்த அம்ரீன் பட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவலர் கொலை..
கடந்த செவ்வாய் கிழமை அன்று ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டின் வெளியே காவலர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தினை தொடந்து அம்ரீன் பட் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. சைபுல்லா காத்ரி என்ற காவலர் தனது 7 வயது மகளை டியூஷனுக்கு அழைத்து சென்ற போது அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்படும் மூன்றாவது காவலர் சைபுல்லா காத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
"ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் பகுதியில் உள்ள கனே மொஹல்லாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே கான்ஸ்டபிள் காத்ரி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"காத்ரியும் அவரது மகளும் அருகிலுள்ள SKIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர் காயங்களால் இறந்தார்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். குழந்தையின் வலது கையில் குண்டு காயம் ஏற்பட்டு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது.
இக்கொலை சம்பவங்கள் குறித்து காஷ்மீர் எல்லை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.