இந்தியாவின் தேசிய விலங்காக இருப்பது புலி. ஆனால், பல்வேறு காரணங்களால் புலிகள் இறப்பு தொடர் கதையாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறது. 


இந்நிலையில், கடந்தாண்டு எத்தனை புலிகள் உயிரிழந்திருக்கின்றன ஆகிய விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிக புலிகளை கொண்ட மாநிலமாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் ஒரே ஆண்டில் 34 புலிகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. 


புலி மாநிலம் என்று அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்தாண்டு 34 புலிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து, கர்நாடகாவில் கடந்தாண்டு 15 புலிகள் உயிரிழந்திருக்கின்றன. இந்த தகவல்கள் அடங்கிய புலிகள் கணக்கெடுப்பு இந்தாண்டு வெளியிடப்பட உள்ளது.


மத்திய பிரதேசம், கர்நாடகாவில் புலிகள் உயிரிழப்பது குறித்து பேசியுள்ள மூத்த வனத்துறை அதிகாரி, "2018 ஆம் ஆண்டின் கணக்கின்படி, இரண்டும் ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையிலான புலிகளை கொண்டிருந்தாலும், மத்தியப் பிரதேசத்தில் ஏன் தென் மாநிலத்தை விட அதிக புலி இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது ஒரு மர்மமாக உள்ளது.


2018ஆம் ஆண்டு, புலி கணக்கெடுப்பின்படி 524 புலிகள் உள்ள கர்நாடகா, மத்தியப் பிரதேசத்துடன் (526) புலி மாநிலம் என்ற பட்டத்திற்காக போட்டியிடுகிறது.


தேசிய புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. சமீபத்திய அகில இந்திய புலி மதிப்பீடு 2022 இல் நடத்தப்பட்டது. அதன் அறிக்கை இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.


ஆனால், புலிகள் இறப்புக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டில் புலிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது.


மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம்  வருகிறது. வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன் கீழ் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.


இந்த ஆணையத்தின் இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, 2021ஆம் ஆண்டில் 117 புலிகள் இறந்திருக்கின்றன. முதன்மை தலைமை வன பாதுகாவலர் (வனவிலங்கு) ஜே. எஸ். சவுகான், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "மத்திய பிரதேசத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான புலிகள் உள்ளன.


மேலும், எங்கள் மாநிலத்தில் காணப்படும் புலிகளின் சடலங்களையும் எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், புலிகள் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், ​​அங்கு (கர்நாடகா) புலிகளின் இறப்பு ஏன் குறைவாக இருந்தது என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது" என்றார்.