சமாஜ்வாதி கட்சியின் (Samajwadi Party) தலைவரும், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akhilesh Yadav) லக்னோவில் உள்ள காவல் நிலையத்தில் போலீசார் வழங்கிய டீ-யை குடிக்க மறுத்துவிட்ட சம்பவம் அரசியல் சூழலில் கவனத்தை ஈர்த்துள்ளது. 


சமாஜ்வாதி கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதற்காக அதை நிர்வகிக்கும் மணீஷ் ஜெகன் அகர்வால் (Manish Jagan Agarwal) கைது செய்யப்பட்டார். அவரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்த லக்னோவில் உள்ள காவல்துறை ஆணையரகத்திற்கு அகிலேஷ் சென்றுள்ளார். 


காவல் நிலையத்தில், போலீசார் அதிகாரிகள் அகிலேஷ் யாதவிற்கு டீ வழங்கியுள்ளனர். அதை அவர் வாங்க மறுத்துவிட்டார். அதோடு, தன் கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 






இது குறித்து அகிலேஷ் கூறுகையில்,” இந்த டீ -யில் விஷம் கலந்திருக்க கூடும்;  இங்கு வழங்கப்படும் டீ-யை நான் குடிக்க மாட்டேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு வேண்டுமெனில், நான் வெளியில் இருந்தே வாங்கி குடித்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 






முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-இன் கட்டுப்பாட்டில் கீழ் காவல் துறை இருப்பதாகவும், அவர்கள் வழங்கும் டீ-யில் விசம் கலந்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அகிலேஷின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சமாஜ்வாதி கட்சியில் மணீஷ் ஜெகன் அகர்வால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்டியின் சார்பில் லக்னோ காவல் நிலையம் அருகில் போராட்டம் நடத்தப்பட்டது.