மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இறுதிகட்டத்தை எட்டுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடையும் வரை ஜந்தர் மந்தர் பகுதியில் இன்றுமுதல் விவசாய சங்கங்கள் அமைதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, ஆகிய மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. குறைந்தபட்ச ஆதரவு விலை கைவிடப்படும், வேளாண் விற்பனைக் குழு மண்டிகள் மூடப்படும் போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து விவசாய சங்கங்கள் போராட்டத்தை தொடங்கினர். 2020 செப்டம்பர் 25ம் தேதி பஞ்சாப்,ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவாசாயிகள், டெல்லியை நோக்கிய பேரணியைத் (டெல்லி சலோ) தொடங்கினர். முதலில், ஹரியானா அரசு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், டெல்லிக்குள் விவசாயிகள் போரரட்டம் நடத்த டெல்லி அரசு அனுமதித்தது.
2020 டிசம்பர் 3ம் தேதியன்று, மத்திய அரசுக்கும், 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் புதுடெல்லியில் முதலாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.மூன்று வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று விவாசாயிகள் தெரிவித்தனர். சட்டத்திலும் பிரச்சனைக்குரிய விசயங்களை பேசித் தீர்த்திக் கொள்ளலாம் என்றும், சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை சகஜமான முறையில் நடத்தப்படலாம் என்றும், இதன் மூலம் தீர்வு காணப்படலாம் என்றும் இருதரப்பனரும் உறுதியாக தெரிவித்தனர். ஆறாவது பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், மூன்று வேளான் சட்டங்களை நிறுத்திவைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக 12.1.2021 தேதி ஆய்வுக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.வேளாண் விலை குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் அசோக் குலாடி, ஷெட்காரி சங்காதனா அமைப்பின் தலைவர் அனில் கன்வாத், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னால் தெற்காசிய இயக்குநர் டாக்டர் பிரமோத் ஜோஷி, அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏ.ஐ.கே.சி.சி) தற்போதைய தலைவர் பூபிந்தர் சிங் மான் ஆகியோர் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் செயல்படும் விவசாயிகள், விவசாயிகளின் அமைப்புகளுடன் இந்தக் குழு ஆலோசனை நடத்தும் என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது.
வேளாண் சட்டங்களுக்கு ஆதாரவாளர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக போராடும் விவாசயிகள் குற்றஞ்சாட்டினர், மேலும்,வேளாண் சட்டங்கள் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும் அவர்கள் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து, பூபிந்தர் சிங் மான் உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதற்கிடையே, மத்திய அரசுடனான பேச்சுவாரத்த்தை தொடர்ந்து நடைபெற்றது. 10-வது சுற்று பேச்சுவாரத்தையில், புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை வருட காலத்திற்கு ஒத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 26 இந்திய குடியரசுத் தினத்தன்று விவசாய அமைப்புகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதன்காரணமாக, மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க:
டெல்லியில் போராட்டத்துக்கு நடுவே ஹோலி கொண்டாடிய விவசாயிகள்!
மூன்று விவசாய மசோதாக்கள் - 120 நாட்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..