‘மூத்தோர் சொல் வார்த்தையே வேதம்’ என முதியோர்களைக் கொண்டு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் 2004 இந்தியப் பொதுத்தேர்தல் அதனை ஆர்.எஸ்.எஸ். 2.0 ஆக அப்டேட் செய்தது எனலாம்.  


பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது பாரதிய ஜனதா கட்சி. வாஜ்பாய் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார், பாரதிய ஜனதாவின் இளம் தலைமுறைத் தலைவராகக் கருதப்பட்ட ப்ரமோத் மகாஜன் மரணமடைந்தார், பொதுத்தேர்தல் தோல்வி அத்வானி தலைவர் பதவிக்குத் தகுதியற்றவர் என்கிற பிம்பத்தை உருவாக்கியது. மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.சி.சுதர்சனன் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தனர். தாக்குப்பிடிக்கத் தலைவரை மாற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதுதான் இந்து மதச்சார்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவராக மோகன் பகவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 36 சார்பு அமைப்புகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸுக்கு அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது வயது 59. முதியோர் இல்லம் போல நடத்தப்பட்டு வந்த அமைப்பில் அது தலைமுறைப் பாய்ச்சல். 




தலைவர் பதவி ஏற்றதுமே அவர் கொண்டு வந்த முதல் மாற்றம் ஆர்.எஸ்.எஸ்.,   மற்றும் அதன் சார்பு அமைப்புகளில் 75 வயதுக்கு மேல் யாரும் தலைமைப் பொறுப்புகளில் இருக்கக்கூடாது என்பதுதான். 1998ல் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு அழைத்து வந்த அத்வானியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பகவத்தின் இந்த அறிவிப்பு. 52 வயது நிதின் கட்காரி பாரதிய ஜனதா தலைவரானார். பிரவீன் தொகாடியா விஷ்வ இந்து பரிஷத் தலைவரானார். அமைப்பின் சீருடை மாற்றப்பட்டது. மாணவர்களை அதிகம் அமைப்பில் இணைக்கும் வகையில் ஷாகாக்கள் இயங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிப்பதை அறிந்துக்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த ஆக்கிரமிப்பு 2014 பொதுத்தேர்தலில் எதிரொலித்தது.மோடி பிரதமரானார்.




சங் பரிவாரங்களான பாரதிய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸும் முட்டல் மோதலில் ஈடுபட்டிருந்த காலத்தில்தான் 2004 பாஜக தேர்தல் தோல்வியைச் சந்தித்திருந்தது. உட்கட்சி மோதல்தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. வார் பூட்ட ஆளற்று பரிவாரங்கள் பரிதவித்து வந்தபோதுதான் கே.சி.சுதர்சனன் மோகன் பகவத்தைத் தனக்கு அடுத்து அமைப்பின் தலைவராக அறிவித்தார்.


1950ல் மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் தீவிர ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்தவர் மோகன் பகவத். தத்தா நானாசாகேப் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவாரின் நெருங்கிய நண்பர். தந்தை மதுக்கர்ராவ் தாய் மாலதி இருவருமே தீவிர ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள். உடன்பிறந்த நால்வர்களில் மூத்தவரான மோகன் பகவத் விலங்குகள் நல மருத்துவராக இருந்தவர் தனது பணியை உதறித்தள்ளிவிட்டு மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.இல் தன்னை இணைத்துக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான ராமர் கோயில் கட்டுவது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கம் மற்றும் பொது சிவில் சட்டம் என சங் பரிவாரங்களின் செக்பாக்ஸை ஒவ்வொன்றாக டிக் செய்து வருகிறார் மோகன் பகவத். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மிச்சமிருக்கிறது அவரது பதவிக்காலம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.