ஓணம் பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் . தமிழர்கள் எப்படி நான்கு நாட்களுக்கு அறுவடை திருநாளான பொங்கல் திருநாளை கொண்டாடுகிறோமோ அப்படித்தான் மலையாள சகோதரர்களும் ஓணம் பண்டிகையை அவர்களது அறுவடை திருநாளாக கொண்டாடுகின்றன. ஒரு வாரம் நடைபெறும் இந்த பண்டிகையின் இறுதி நாள்தான் உச்ச பட்ச கொண்டாட்ட நாளாக பார்க்கப்படுகிறது. அதனை திருவோணம் என அழைக்கின்றனர். பூக்கோலம் , வகை வகையான உணவுகள் , புத்தாடை , படகு போட்டி என இன்று களைக்கட்டும். அதே போல படகு போட்டி பண்டிகை முடிந்தும் சில இடங்களில் நடைபெறுவது வழக்கம். அப்படியான ஒரு இடம்தான் கேரள மாநிலம்  பத்தினம்திட்டாவில் உள்ள ஆரன்முலா கிராமத்தின் படகுப்போட்டி. இந்த போட்டி வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் படகுப்போட்டியின் சோதனை போட்டி சமீபத்தில் நடைப்பெற்றது.




 பம்பை ஆற்றின் அமைதியான உப்பங்கழியின் கரையோரங்களில் வரிசையாக மக்கள் உற்ச்சாகப்படுத்த நிற்கின்றனர். பல்வேறு கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நேர்த்தியான பாம்பு படகுகளில் போட்டியாளர்கள் தயாராகிக்கொண்டிருக்க வஞ்சிப்பாட்டு (படகுப் பாடல்) மற்றும் தாள தாளங்கள், தாய் தக தக தை தோம் என இசை முழங்க போட்டியாளார்கள் தயாரானார்கள் .  படகுகள் ஒவ்வொன்ரும் பத்தினம்திட்டாவின் ஒவ்வொரு கிராமங்களை குறிப்பதாக இருக்கிறது. பளபளக்கும் பட்டுப் பட்டைகளால் ,  வண்ணமயமான குடைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்ட  படகுகள் பார்ப்பதற்கு அவ்வளவும் அழகாக இருக்கின்றன. படகுகள் 100 அடி நீளம் கொண்டது இதில்  100 துடுப்பாளர்கள் மற்றும் 25 பாடகர்கள் இடம்பெறுவார்கள்.  படகின் ஒரு முனையில் உள்ள தங்க ஜரிகை, கொடி மற்றும் மையத்தில் அலங்கார குடை ஆகியவை ஒவ்வொன்றும் பார்வைக்கு இன்பம் தருகின்றன.ஆரம்பத்தில் இந்த படகுகள் அறுவடை பயிர்களை ஏற்றிச்செல்வதற்கும் பின்னர் போர்காலங்களிலும் பயன்படுத்தப்பட்ட படகுகள் இன்று கோவில் வழிபாட்டிற்கும் , ஓணம் போட்டியிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.




ஆலப்புழாவில் மிகவும் பிரபலமான நேரு டிராபி படகுப் போட்டியின் வேகத்திற்கு ஒன்றும் இருக்காது இப்போட்டி என்றாலும் ஆரண்முலா பந்தயம் மிகவும் பாரம்பரியமான, வண்ணமயமான கொண்டாட்டமாக இருக்கும். இந்த போட்டியின் பொழுது சுற்றியிருக்கும் கிராம மக்கள் கிருஷ்ணரைப் புகழ்ந்து படகுப் பாடல்களைப் பாடுவது மிகவும் பாரம்பரியமான ஒன்றாக இருக்கிறது. இதுதான் வஞ்சிப்பாட்டு. இது புராணக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக படகுகளை மக்கள் கடவுளாக கருதுகின்றனர்.


பம்பைக் கரையில் நடைபெறும் ஒவ்வொரு படகுப் போட்டிக்குப் பிறகு போட்டியாளர் குழுவினர்  கோவிலுக்கு வந்ததும் சிறப்பு மரியாதை பெறுகின்றனர். பின்னர் சாப்பாட்டு அறைக்குள் நுழந்தையும் கைத்தட்டல் மற்றும் பாடல்களுடன் வரவேற்க்கப்பட்டு 64 வகையான விருந்துகள் பரிமாரப்படுகிறது. இதுதான் உலகின் மிகப்பெரிய சைவ விருந்து என்றால் மிகையில்லை.