இந்தியாவின் அடையாளமே வேற்றுமையில் ஒற்றுமை. அதை அவ்வப்போது மக்கள் தங்களின் செயல்பாடுகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.


மும்பையைச் சேர்ந்தவர் ப்ரியா சிங். இவர் தனது வீட்டிலிருந்து விமான நிலையம் செய்ய உபேர் கார் புக் செய்துள்ளார். பயணம் ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே டிரைவரின் ஃபோனில் தொழுகை அழைப்பு ஒலியான அசான் ஒலித்துள்ளது. உடனே பிரியா சிங், டிரைவரிடம் நீங்கள் நோன்பு இருக்கிறீர்களா? இப்போது அதை துறக்க வேண்டுமா என வினவியுள்ளார். அந்த டிரைவரும் ஆமாம் இன்று நோன்பு வைத்துள்ளேன். ஆனால் இது வாடகை கார், உபேரில் இருந்து உங்கள் சவாரியை ஏற்கவேண்டிய சூழலாகிவிட்டது என்றார். உடனே பிரியா சிங் சற்றும் தயங்காமல் நீங்கள் காரின் பின்புறம் சென்று தொழுகை செய்யுங்கள் என்று கூறி காரை நிறுத்தச் சொல்லியுள்ளார். அந்த டிரைவரும் ஆச்சர்யம், நன்றி கலந்த உணர்வுடன் தனது இறைக் கடமையை இனிதே நிறைவேற்றியுள்ளார். பின்னர் பிரியா சிங் விமான நிலையத்தில் இறங்கினார். 


இது குறித்து பிரியா சிங் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் எழுத அது மிகவும் பிரபலமாகிவிட்டது. பல்வேறு ஊடகங்களிலும் அது செய்தியாகியுள்ளது.


பிரியா சிங் தனது பதிவின் கீழ், இது தான் என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்த இந்தியா என்றும் பதிவிட்டுள்ளார். இதைக் குறிப்பிட்டு லிங்க்ட் இன் தளத்தில் பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.



மேலும், பிரியா சிங் தனது பதிவில், அந்த டிரைவர் அவருடைய தொழுகையை முடித்துவிட்டு எங்கள் பயணம் தொடங்கியவுடன் நாங்கள் நல்லிணக்கம் பற்றி நிறைய பேசினோம். அப்போது நான் அவரிடம் நடந்த சம்பவம் குறித்து பல்வேறு சமூக வலைதள பக்கங்களிலும் போஸ்ட் செய்ய விரும்புவதாகக் கூறினேன். அந்தப் பதிவு மனிதநேயத்தின் அடிப்படையை ஊக்குவிக்கும் என்று அவரிடம் கூறினேன். அவரும் சரி என்றார். இதோ உங்களுக்காகப் பகிர்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். #ramadan2022 #uberindia #uber #uberdriver #RamadanMubarak #ramadanmubarak2022 போன்ற் ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி அந்தப் பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.


இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் இந்தியாவின் ஒற்றுமைக்கு, மதநல்லிணக்கத்துக்கு நல்லதொரு அடையாளமாக அமைந்துள்ளதாக பலரும் புகழ்ந்து, பகிர்ந்து வருகின்றனர். ஆங்காங்கே அவ்வப்போது வெறுப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் கூட இது போன்ற நற்செயல்களை அடையாளப்படுத்தி பிரபலப்படுத்துவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுவாகச் செய்ய முடியும் எனக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.