கர்நாடகாவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஸ்டேட்டஸ் மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ எனக் கூறப்படுகிறது.


 சமூக ஊடகங்களில் முஸ்லீம் மதம் தொடர்பாக  மார்பிங் செய்யப்பட்ட பதிவு ஒன்று நேற்று வைரலானது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காவல்நிலையத்தின் மீது ஒரு கும்பல் கற்களை வீசியுள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. . இந்த வன்முறையில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். மேலும் கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் இன்று போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர்.


வன்முறைக்குப் பிறகு சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஹூப்பள்ளி- தர்வாட் நகர காவல்துறை ஆணையர் லாபு ராம் கூறினார்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பழைய ஹூப்பள்ளி காவல் நிலையத்திற்கு வெளியே பலர் கூடி, அவதூறான மார்பிங் புகைப்படத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் அபிஷேக் ஹிரேமத்தை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். புகாரின் பேரில், ஆனந்த் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஹிரேமத்தை போலீசார் கைது செய்து பழைய ஹுப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.


போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர். வன்முறையில் ஒரு ஆய்வாளர் உட்பட நான்கு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்” என்று கூறினார்.


முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போஸ்ட் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், பழைய ஹுப்பள்ளியில் வன்முறை நடந்துள்ளது. யாரேனும் சட்டத்தை கையில் எடுத்தால், காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், சட்டம் மற்றும் ஒழுங்கில் இருந்து பார்க்க வேண்டாம்.


இதுபோன்ற சம்பவங்கள் நகரில் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.  “சமூக ஊடகங்கள் வன்முறையைப் பரப்பும் இடமாக மாறிவிட்டன, காவல்துறை அதை அறிந்து கொள்ள வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம், பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து இந்த சமூக ஊடகப் போராளிகளின் மௌனம் ஆபத்தானது” என்றார்.