முஸ்லீம் மக்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களை பேசுவோர் மீது உபா சட்டத்தின் கீழ் அதாவது சட்டவிரோத ஆயுதப்பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி ஷாஹீன் அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளது. 


அந்த கருத்து விவரம் பின்வருமாறு:


உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப், ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் இது 21 ஆம் நூற்றாண்டு. இப்போது நாம் கடவுளை எவ்வளவு தூரம் தாழ்த்தியுள்ளோம்? அரசிய சாசன சட்டப்பிரிவு 51 ஆனது நமக்கு கொஞ்சம் அறிவியல் சிந்தனையும் வேண்டுமென்று வலியுறுத்துகிறது. ஆனால் நாம் மதத்தின் பெயரால் என்ன செய்து வைத்துள்ளோம். இது மிகவும் துயரமானது. உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநில அரசுகள் உடனடியாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் வருமென்று காத்திருக்க வேண்டாம்.  இதில் அரசு நிர்வாகம் ஏதேனும் மெத்தனம் காட்டினால் அது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும் என்று கூறினர்.


கவனிக்கப்பட வேண்டிய ஹர்ப்ரீத் மன்சுகானி வழக்கு:


சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகக் கூறி ஹர்ப்ரீத் மன்சுகானி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். வெறுப்புப் பேச்சுக்கள் நம் நாட்டில் லாபம் தரும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு அரசியல் கட்சி ஒன்று நிதியுதவி செய்ததைக் குறிப்பிடலாம். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் முன்வைத்த கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவையே.


அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் யுயு லலித், எஸ்ஆர் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மனுதாரர் தமது மனுவில் வெறுப்புப் பேச்சுக்களால் தேசத்தின் ஒட்டுமொத்த சூழல் மீதும் கறைபடியும் எனக் கூறியுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்தச் சூழலையும் கெடுக்கும் வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும் என்பது சரியானதே. அதனை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களும் இருக்கலாம். அது ஏற்கத்தக்கதாகவும் இருக்கலாம். ஆனால்,மனுவில் இரண்டு சம்பவங்கள் மட்டுமே தெளிவாக ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 58 வெறுப்புப் பிரச்சார சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சம்வங்களுக்கான விவரம் இல்லையே. யார் பேசியது? வழக்குப் பதியப்பட்டதா என்ற விவரமும் இல்லை. இது தொடர்பாக மனுதாரர் மேலும் தகவல்களை இணைத்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.