ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் இடலி வருமா யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க என்று கேட்காதீர்கள். ஏனெனில் இது உண்மைச் செய்தி. பெங்களூருவில் உண்மையிலேயே இட்லி வழங்கும் ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அட இது புதுசா இருக்கே என்கிறீர்களா? ஆம் புதுசுதான். இந்த இட்லி ஏடிஎம் உருவான கதையும் கொஞ்சம் திணுசு தான். ஃப்ரெஷ் ஹாட் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தான் இந்த இட்லி ஏடிஎம் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்  ஷரன் ஹிரேமத் கூறும்போது, கடந்த 2006-ம் ஆண்டு  எனது மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இரவு நேரம். நானும் என் மனைவியும் பதறிக்கொண்டு மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுக்கும் முன் இட்லி சாப்பிடக் கொடுங்கள் என்று கூறினார்.  ஆனால் வீட்டில் இட்லி மாவு காலியாகி விட்டதால் இரவு 10 மணிக்கு இட்லி கடையைத் தேடி அலைந்தேன். எங்கும் இட்லி கிடைக்கவில்லை. 






இதனால் பணத்தை எடுக்க உதவும் ஏடிஎம் இயந்திரத்தைப் போல 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், ஒரு இட்லி ஏடிஎம் இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். ஒரு தொழில்முனைவோராக எனது யோசனையை, என் நண்பர் சுரேஷ் சந்திரசேகரனிடம் கூறினேன். அன்றுடன் அந்தப் பேச்சு ஓயவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் அதைப்பற்றி ஆலோசித்தோம். மெக்கானிக்கல் பொறியாளரான எனது நண்பர்  சுரேஷ் சந்திரசேகரன் இந்த ரோபோட்டிக்ஸ் இட்லி இயந்திரத்தை வடிவமைத்தார். இதனை 2020லேயே உருவாக்கினாலும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதனை மேம்படுத்தி சில இடங்களில் சோதனை அடிப்படையில் இயக்குகிறோம். 


விரைவில் பெங்களூருவில் 24 மணி நேரமும் சுடச்சுட இட்லி பரிமாறும் வகையில் தானியங்கி இயந்திரம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ரோபோட்டிக் இட்லி இயந்திரம் 10 நிமிடங்களில் வடை மற்றும் இரண்டு வகை சட்னியுடன் இட்லியை பரிமாறுகிறது. காபி மெஷினைப் போலவே ஒரு சில நிமிடங்களில் இட்லி, சட்னி, வடை ஆகியவற்றை இந்த இயந்திரம் சுடச்சுட பரிமாறுகிறது. இதன் அறிமுக வீடியோ அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் வைரலானது.


இந்தியாவில் அனைவரும் விரும்பி சாப்பிடும், 100 சதவீதம் ஆரோக்கியமான உணவு என்றால் அது இட்லி தான். குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இட்லி தேவைப்படுகிறது. எனக்கும் இட்லி மிகவும் விருப்பமான உணவு. அதனாலேயே இதனை ஏடிஎம் இயந்திரத்தில் வழங்குவது மெகா ஹிட்டாகும் என்று கணித்தோம் என்று ஹரன் ஹிரேமத், சுரேஷ் சதிரசேகரன் கூறுகின்றனர்.


இந்த இட்லி ஏடிஎம் வீடியோ வைரலாக சில நெட்டிசன்கள் அதன் கீழ் இந்த ஏடிஎம் இயந்திரத்தை இயக்கி பரிசோதித்த மெக்கானிக் எத்தனை இட்லியை சாப்பிட நேர்ந்ததோ என்று கிண்டல் பதிவுகளையும் பகிர்ந்துள்ளனர்.