இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்ற திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, கவனமீர்த்து வருகிறது. 


திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயது ஆர்யா ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே அவர் இந்தியாவின் இளம் வயது மேயராக 2020ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருக்கும் கேரள சட்டப்பேரவையின் இள வயது எம்எல்ஏவான சச்சின் தேவுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. 


இவர்களுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துவா தேவ் என்று பெயர் சூட்டப்பட்டது. குழந்தையின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆர்யாவும் சச்சினும் பகிர்ந்து இருந்தனர். இவை லைக்குகளை அள்ளிய நிலையில், நெட்டிசன்கள் பாராட்டு மழையைக் குவித்தனர். 






இந்த நிலையில் ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்க, ஆர்யா கோப்புகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். 


யார் இந்த ஆர்யா?



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் முடவன்முகல் வார்டில் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் படித்துக்கொண்டே, இந்திய மாணவர் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். அவர் 2020ஆம் ஆண்டு, மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.


மொய்யோ, பரிசுகளோ வேண்டாம்
 
தொடர்ந்து தனது பால்ய கால நண்பரான சச்சின் தேவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு யாரும் எந்த விதமான பரிசுகளும், மொய்யும் தர வேண்டாம் என ஆர்யா ராஜேந்திரன், சச்சின் தேவ் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஒருவேளை பரிசு வழங்க நினைத்தால் அதை மாநகராட்சியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கோ வழங்கலாம் எனவும் இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து எளிமையான முறையில் இருவரின் திருமணமும் நடைபெற்றது.


இந்த நிலையில், இவர்களுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துவா தேவ் என்று பெயர் சூட்டப்பட்டது.


தற்போது ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் தாயின் ஒரு கையில், குழந்தை தூங்கிக் கொண்டிருக்க, ஆர்யா மற்றோரு கையைக் கொண்டு கோப்புகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்.