திருவனந்தபுரம் அருகே வாங்கிய கடனுக்கு வீட்டை ஜப்தி செய்யப் போவதாக வங்கியில் இருந்து ஜப்தி நோட்டீஸ் வந்த சில மணி நேரத்தில் மீன் வியாபாரிக்கு கேரள லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு கிடைத்தது. 


கேரள மாநிலம் கொல்லம், மைநாகப்பள்ளியை சேர்ந்தவர் 40 வயதான பூக்குஞ்சு . இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் இரு சக்கர வாகனத்தில் சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறார். அடிக்கடி லாட்டரி எடுக்கும் பழக்கம் கொண்ட பூக்குஞ்சுவுக்கு ஏராளமான கடன் இருந்து உள்ளது. இதனால் தனது வீட்டை அடமானம் வைத்து வங்கியில் இருந்து ரூ.9 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.


இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலுமாக சேர்த்து ரூ. 12 லட்சம் வங்கியில் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பணத்தை கட்டத்தவறினால் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கியில் இருந்து பூக்குஞ்சுவுக்கு நேற்று முன்தினம் மதியம் நோட்டீஸ் வந்தது. இதனால் அவர் மனமுடைந்து போனார். 


ரூ.70 லட்சம் கிடைத்தது இந்த நிலையில் மாலை 3 மணியளவில் அவர் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த அக்ஷயா லாட்டரியின் குலுக்கல் முடிவு குறித்து பார்த்தார். அப்போது அவருக்கு முதல் பரிசு ரூ.70 லட்சம் கிடைத்து இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பூக்குஞ்சும், அவரது மனைவி தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


 பரிசு கிடைத்த லாட்டரி டிக்கெட்டை பூக்குஞ்சு தனது வீட்டை அடமானம் வைத்து கடன் எடுத்த வங்கியிலேயே டெப்பாசிட் செய்ய முடி செய்தார்.இதனைத்தொடர்ந்து, அவரது வீட்டை ஜப்தி செய்யும் முடிவை வங்கி அதிகாரிகள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.


மேலும் ஒரு நிகழ்வு: 


இதேபோல் கடந்த ஜூலை மாதம் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது. கேரள மாநிலம் மஞ்சேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது பவா (50). இவரது மனைவி அமீனா (45) இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் இரு மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்ட நிலையில், இரு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 8 மாதத்திற்கு முன்னதாக தனது கனவு வீட்டை கட்டிய பவா, தனது மகன் நிசாமுதீனை வேலைக்காக கத்தாருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.


மகள்களுக்காக வங்கியில் வாங்கிய 10 லட்சம் ஒரு பக்கம், வீடு கட்ட உறவினர்களிடன் வாங்கிய 20 லட்சம் இன்னொரு பக்கம், மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப வாங்கிய கடன் வாங்கிய பணம் மற்றொருபக்கம் என எல்லாம் சேர்த்து பவாவை  கிட்டதட்ட 50 லட்ச கடனாளியாக மாற்றிவிட்டது.


ஒரு கட்டத்தில் கடனால் தத்தளித்த பவா, தனது வீட்டை விற்று விட்டு தனது இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டிற்கு குடிபெயர முடிவெடுத்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது  வீட்டை வாங்க வந்தவர்களிடம் பேரம் நடத்தினார்


இந்தப்பேரத்தில் பவா  45 லட்சத்திற்கு வீட்டை விற்க விரும்புவதாக சொல்ல, வாங்க வந்தவர்களோ வீட்டை 40 லட்சத்திற்கு கேட்டு, மாலை வருகிறோம் என்று சொல்லி சென்றிருக்கிறார்கள்.ஏற்கனவே கடனில் தத்ததளித்து கொண்டிருந்த பவா மாலை வருபவர்களிடம் அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ, அதை வாங்கிவிட்டு பின்னர் வீட்டை கொடுத்து விடலாம் என முடிவெடுத்து இருந்தார். இதனிடையே 1 மணி அளவில் வெளியே சென்ற அவர் 4 லாட்டரி சீட்டுகளையும் வாங்கி இருக்கிறார். சற்றும் எதிர்பார்க்காத வகையில் 3 மணியளவில் பவா அதிஷ்டத்திற்கு சொந்தக்காரராக மாறிவிட்டார். ஆம்  லாட்டரியில் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துவிட்டது. வரியெல்லாம் பிடித்துப்போக அவருக்கு 63 லட்சம் கிடைத்துள்ளது. இந்த செய்தியை அறியாத ரியல் எஸ்டேட் புரோக்கர் மாலை 5 மணி அளவில் வீட்டை வாங்க அங்கு வந்திருக்கிறார். ஆனால் பவா தான் வீட்டை விற்கவில்லை என்று கூறிவிட்டார்.