NEET Case: நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டதிருத்தம்: தமிழ்நாடு அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Continues below advertisement

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி, கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.

Continues below advertisement

தமிழ்நாடு ரிட் மனு:

இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்தன. பின்னர் 2020-ஆம் ஆண்டு, நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

பின்னர், ரிட் மனுவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 27-ஆம் தேதி, தமிழ்நாடு மனுவை நீதிபதி சுதான்ஷூ விசாரித்தார். அப்போது, இம்மனுவானது விசாரணைக்கு உகந்தது என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு மனு மீது விசாரணை மேற்கொண்டது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், கால அவகாசம் கோரி , தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீட்:

நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டில், 17.64 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அதில் மொத்தமாக 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நீட் தேர்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை போன்ற அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் பெயரில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ’தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று நீட் தேர்விற்கு பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் குறைவு’ என்று கூறி, சட்டம் இயற்றப்பட்டது. 

இந்நிலையில், நீட் தேர்வு சட்ட திருத்த வழக்கின் தீர்ப்பு குறித்து,  மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகள் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு சென்றுள்ள நீட் ரத்து மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்குமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola