நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும் வகையிலான இந்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பயன்பாடு என  இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐஎம்எஃப் புகழாரம் சூட்டியுள்ளது. 


இதுகுறித்து ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகாரத் துறையின் துணை இயக்குநர் பவ்லோ மோரோ கூறி உள்ளதாவது:


''இந்தியாவில் சமூக நலத் திட்டங்களும் மக்கள் நல அரசுத் திட்டங்களும் மக்களுக்கு நேரடியாகப் பணம் கிடைக்கும் வகையில்  (direct cash transfer scheme) அமைந்திருக்கின்றன. இந்தியாவில் இருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நலத் திட்டங்கள் அனைத்தும், உண்மையிலேயே குறைந்த வருமானம் கொண்ட கோடிக்கணக்கான மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. 


நேரடி பணப் பரிமாற்ற முறை மக்களாகிய நுகர்வோர்களுக்கு மிகுந்த பலனை அளித்திருக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் சில உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம். 


இந்திய நாட்டைப் பார்க்கும்போது, அதன் செயல்பாடுகள் மிகுந்த ஈர்ப்பை அளிக்கக்கூடியதாக உள்ளன. இந்தியாவில் புதிய தொழில்நுட்பப் பயன்பாடுகளும் அதிகரித்துள்ளன. இதன்மூலம் சிக்கலான விவகாரங்கள் எளிதில் தீர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆதார் மூலம் தனித்த அடையாள அமைப்பு உருவாக்கப்பட்டு, நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


சில நாடுகளில் மொபைல் பேங்கிங் மூலம் ஏழை மக்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் அனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது. அதேபோல ஆப்பிரிக்காவிலும் நிறைய கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன''.


இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகாரத் துறையின் துணை இயக்குநர் பவ்லோ மோரோ கூறி உள்ளார். 




ஐஎம்எஃப்  நிதி விவகாரத் துறையின் இயக்குநர் விட்டர் கப்சார் கூறும்போது, ''இத்தகைய மக்கள் நலத் திட்டங்களைப் பரவலாக்கும் வகையில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார். 


வாஷிங்டனில் நடைபெற்று வரும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில், ’உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்: எதிர்கொள்ளப்படும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி’ என்ற பெயரில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.


அதன்படி, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் 8.7 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை இந்தியா எட்டியுள்ளது. ஐஎம்எஃப் அமைப்பால் ஜூன் 2022இல் வெளியிடப்பட்ட கணிப்பை ஒப்பிடுகையில் இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 0.6 சதவீத புள்ளிகள் கீழ்நோக்கி சரிந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 6.8 விழுக்காடாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 


ரஷ்ய - உக்ரைன் போரின் தாக்கம், உலகளவில் கடுமையான பணவீக்கம், சர்வதேச அளவில் கடுமையாக்கப்பட்டு வரும் நாணய நிபந்தனகள், கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட நீடித்த விளைவுகள் ஆகியவற்றின் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஒட்டுமொத்த மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.