ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் நீதிபதி ஹேமந்த் குப்தா தடை செல்லும் என்றும், சுதான்சு துலியா தடை செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். 2 நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு 3 வதுந் நீதிபதிக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தீர்ப்பு :
கர்நாடக மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார். அரசியல் சாசனம் அனுமதித்துள்ளவாறு, கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என தெரிவித்தார்.
நீதிபதி சுதன்ஷு துலியா தீர்ப்பு :
நீதிபதி சுதன்ஷு துலியா மேல்முறையீடுகளை அனுமதித்து கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். ஹிஜாப் அணிவது தனிப்பட்ட விருப்பம் என்பதை தாண்டி வேறு எதுவுமில்லை, பெண்களுக்கு கல்வி அளிப்பது மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஹிஜாப் வழக்கின் முழு விவரம் :
கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலம் உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கடந்த அவரம் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்து வந்தனர். இதற்கிடையே பிப்.5 அன்று இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
பிப்.7 : கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறொரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை. இதுகுறித்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பிப்.8 : கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்தது. இதையடுத்து மாநில அரசின் தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 10 நாட்களுக்கு மேலாக மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 22ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.