மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த மாதம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் 11வது தொகுதியில், ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாய் மொழிக்கு பதிலாகவும், ஆங்கில மொழியை மறக்க வைக்கும் முயற்சியாகவும் இந்த செயல் இருப்பதாக கருத்து வெளிப்பட்டது.
இந்த நிலையில், நாடுமுழுவதும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளும், கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று (அக்.12 ம் தேதி) இந்தியாவில் மேற்கு வங்க மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க, கொல்கத்தாவில் பங்களா போக்கோ என்ற அமைப்பு சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்களா போக்கோ என்ற அமைப்பினரை தவிர, ஆயிரக்கணக்கான மேற்கு வங்க மக்கள் கலந்து கொண்டனர். அதேபோல், வாழ்வாதாரத்திற்காக குடிப்பெயர்ந்து வாழும் தமிழர்கள், கன்னடர்கள், பஞ்சாபியர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியின்போது இந்தி திணிப்பை கண்டிக்கும் பல்வேறு பதாகைகளும், வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் மக்கள் முன்நின்று எடுத்து சென்றனர். அப்போது, பிரபுல்ல சந்திர ரே, சித்தரஞ்சன் தாஸ், அசோக் மித்ரா, அண்ணாதுரை, குவெம்பு, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தனர்.
மேலும், வருகிற 16 அக்டோபர் 2022 அன்று, மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்களா போக்கோ போராட்டங்களை நடத்தும் எனவும் அறிவித்தது.
முன்னதாக, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்துவிட வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கல்வி நிலையங்களில் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக முதல் குரல் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “’இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான் பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுவது ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் அலுவலர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது. இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. இதனைத் தமிழ்நாடு மட்டுமல்ல, எங்களின் அண்டை மாநிலங்கள் உள்பட அவரவர் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்க மாட்டார்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியைக் கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.