டெல்லியில் உள்ள ஜன்பத்தில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்திற்கு பதிலாக மாற்றப்படும், யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய அருங்காட்சிகத்துள் ஒன்றாக இருக்கும்படி உருவாகவுள்ளது,
யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகம்
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்றாய் இருக்கப்போகும் யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் கட்டப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வரலாற்றை சொல்லும் விதமாக அமைய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தேசிய தலைநகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (ஐஇசிசி) வளாகத்தின் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் போது யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் குறித்து அறிவித்தார்.
கடந்த மே மாதம், பிரகதி மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியின்போது, வரவிருக்கும் அருங்காட்சியகத்தின் மெய்நிகர் நடையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அருங்காட்சியகத்தின் மெய்நிகர் நடை (Virtual Walk), திட்டம், காட்சியகங்கள் மற்றும் தோட்டங்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய டிஜிட்டல் அனுபவத்தை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யுகே யுஜீன் பாரத் அருங்காட்சியகம் பற்றிய முக்கிய விவரங்கள்:
1) இந்த அருங்காட்சியகத்தில் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் நாகரிக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் எட்டு கருப்பொருள் பிரிவுகள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது டெல்லியில் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் கட்டப்படும்.
2) இது 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். ஒரு தரைதளம் மற்றும் மூன்று மாடிகளில் கட்டபப்டும் இந்த கட்டிடம் 950 அறைகளைக் கொண்டிருக்கும்.
3) அந்த எட்டு பிரிவுகளில், பண்டைய இந்திய அறிவுத்திறன், பழங்காலத்திலிருந்து இடைக்காலம், இடைக்காலம், இடைக்காலம் முதல் மாறுதல் கட்டம், நவீன இந்தியா, காலனித்துவ ஆட்சி, சுதந்திரப் போராட்டம் மற்றும் 1947 க்கு பின் 100 ஆண்டுகள் என பிரிக்கப்பட்டு இருக்கும்.
4) அருங்காட்சியகத்தின் மெய்நிகர் நடை (Virtual Walk), திட்டம் முடிந்த பின் காட்சியகங்கள் மற்றும் தோட்டங்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய டிஜிட்டல் அனுபவத்தை அளிக்கிறது. இந்தியாவின் பண்டைய நகர திட்டமிடல் அமைப்புகள், வேதங்கள், உபநிடதங்கள், பண்டைய மருத்துவ அறிவு போன்றவை, மௌரியர் முதல் குப்த பேரரசுகள், விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு மற்றும் பல வம்சங்களின் ஆட்சி ஆகியவை இந்த நடைப்பயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
5) யுகே யுஜீன் பாரத் அருங்காட்சியகம் ஜன்பத்தில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்திற்குப் பதிலாக மாற்றி அமைக்கப்படும். தற்போதைய தேசிய அருங்காட்சியக கட்டிடம் கர்தவ்யா பாதையின் ஒரு பகுதியாக மாறும். மேலும் பழைய அருங்காட்சியகத்தில் இருக்கும் சேகரிப்புகள் திட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளின் கட்டிடங்களுக்கு மாற்றப்படும்.
6)புதிய அருங்காட்சியகத் திட்டத்தின் காலக்கெடு குறித்து கேட்டபோது, கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, "அரசாங்கம் எப்போதும் காலக்கெடுவுடன் தான் செயல்படுகிறது, நிர்ணயித்த காலத்திற்கு முன்பே முடிக்க முயற்சிக்கிறோம்," என்று முன்பு கூறியிருந்தார். வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று 2021ஆம் ஆண்டு அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.