உலகக் கோப்பை 2023ல் நேற்று நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டிக்கு பிறகு தொடர் ஆட்ட நாயகன் விருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
ஐசிசி உலகக் கோப்பை 2023ன் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா அணி.
2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இந்திய அணிக்காக விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும், குறிப்பாக விராட் கோலியின் பார்ம் வேறு மாதிரியாக இருந்தது.
விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 11 இன்னிங்ஸ்களில் 3 சதம், 6 அரைசதம் உட்பட 765 ரன்கள் குவித்துள்ளார். இதன்போது, இவரது சராசரி 95.62 மற்றும் 90.31 ஸ்ட்ரைக் ரேட்டாக இருந்தது. மேலும், ஒரு உலகக் கோப்பை பதிப்பில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் (673) என்ற உலக சாதனையையும் விராட் கோலி முறியடித்தார்.
இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து ரன் குவித்ததற்காக கோலி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இவருக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி விருதை வழங்கி கௌரவித்தார். இதை வாங்குவதற்கு முன், கோலி மனமுடைந்து அழுத புகைப்படம் நம் அனைவரையும் கண் கலங்க செய்தது.
இதற்கு முன்னதாக, கடந்த 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் இதேபோல் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அப்போது அந்த உலகக் கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடி 673 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கருக்கே தொடர் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 1992 ம் ஆண்டு முதல் வழங்கப்படும் தொடர் ஆட்ட நாயகன் விருதை வென்ற நியூசிலாந்தின் மார்ட்டின் குரோவ் இந்த விருதை வென்ற முதல் வீரர் ஆவார். அதேபோல், இந்த விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கர் பெயரில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தின்மூலம், 48 ஆண்டுகால வரலாற்றில் சொந்த மண்ணில் இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.
உலகக் கோப்பையை வெல்லாத அணியில் தொடர் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்:
- 1992 - மார்ட்டின் குரோவ் (நியூசிலாந்து)
- 1999 - லான்ஸ் க்ளூஸனர் (தென்னாப்பிரிக்கா)
- 2003 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
- 2019 - கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
- 2023 - விராட் கோலி (இந்தியா)
ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை தொடர் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்:
- 1992 - மார்ட்டின் குரோவ் (நியூசிலாந்து) - 456 ரன்கள்
- 1996 - சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 221 ரன்கள் மற்றும் ஆறு விக்கெட்டுகள்
- 1999 - லான்ஸ் க்ளூசனர் (தென்னாப்பிரிக்கா) - 281 ரன்கள் மற்றும் 17 விக்கெட்டுகள்
- 2003 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 673 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகள்
- 2007 - கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - 26 விக்கெட்டுகள்
- 2011 - யுவராஜ் சிங் (இந்தியா) - 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள்
- 2015 - மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 22 விக்கெட்டுகள்
- 2019 - கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 578 ரன்கள் மற்றும் 2 விக்கெட்கள்; கேப்டன் பதவி
- 2023 - விராட் கோலி (இந்தியா) - 765 ரன்கள் மற்றும் 1 விக்கெட்