நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றி வருகிறார். 


இன்று தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடர், மொத்தம் 17 வேலை நாட்கள் நடைபெறும். அமர்வின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.


பிரதமர் நரேந்திர மோடி உரை:


புதிய மாநிலங்களவைத் தலைவரான ஜெகதீப் தன்கரை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.






நாடு சுதந்திரம் அடைந்ததின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிவரும் நேரத்தில் ‘ Azadi Ka Amrit Mahotsav ’ நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது சிறப்பானது. 


குடியரசுத் தலைவர் திரெளபது முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர்களையும் பிரதமர் பாராட்டினார். மாநிலங்களவை மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி புகழாரம்.






பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் சந்திப்பு:


கூட்டத் தொடர் முக்கியமானது:


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” இந்த கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. இதில் அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத் தொடரில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் கூட்டத் தொடர் நடைபெறுவது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.


”மிகப்பெரிய கவுரவம்”


இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது,  “ஜி20 அமைப்புக்கு தலைமையேற்றிருப்பது, இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவும். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பதை உலகமே உற்று நோக்குகிறது” என்றார். 


இதற்கிடையில், முதல்முறையாக இந்த கூட்டத் தொடரில் பங்கேற்கும் புதிய எம்.பிக்கள் மற்றும் இளம் எம்.பிக்கள் ஆகியோருக்கு கூட்டத் தொடரின் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொண்டார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில்  நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும், அனைத்து கட்சி தலைவர்களும் விவாதங்கள் மூலம் முக்கியமான முடிவுகளை இந்த அமர்வில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.