Delhi MCD Results 2022: டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 


கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அரவிந்த் கெஜிர்வால் முதல்வராக உள்ளார். இவரது கட்சியான ஆம் ஆத்மி கட்சி இந்த மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று தனது பலத்தினை நிரூபிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி இந்த தேர்தலில்  149 முதல் 171 இடங்களை பெறும் என கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. பாஜக 69 முதல் 90 வார்டுகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. 


மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 50% வாக்குகளே பதிவானது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி 101 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கருத்துக் கணிப்புகளில் கூறியதைப் போலவே, காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே டெல்லி மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கரமே தொடர்ந்து மூன்று முறை ஓங்கி உள்ளது. ஆனால் இந்த முறை ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி குறித்து மக்களிடத்தில் உள்ள நன்மதிப்பால்,  ஆம் ஆத்மியின் கோட்டையாகவே டெல்லி மாறியுள்ளது. மேலும்,  மிகவும் பலமாக இருந்து வந்த பாரதிய ஜனதாவை ஆம் ஆத்மி இந்த முறை ஓரம் கட்ட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கருத்து கணிப்புகள் கூறிவந்ததைப் போலவே, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் அமைந்துள்ளது. இதுவரை வந்துள்ள தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் படி, ஆம் ஆத்மியின் கையே ஓங்கி இருக்கிறது. 


 






 


Track MCD Live results for all 250 wards on this link