பாரத் ஜோடா பயணத்தில் ராகுல் காந்தி பாஜக தொண்டர்களை பார்த்து முத்தங்களை பறக்க விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை சந்திக்கவும், மத்திய பாஜக அரசிற்கு  எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கத்திலும் ‘ பாரத் ஜோடா’  என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை   மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய  இந்த பயணம்  காஷ்மீரில் நிறைவடைகிறது. இந்த பயணத்தில் ராகுல் காந்தி பல்வேறு மக்களை சந்தித்து கவனம் ஈர்த்து வருகிறார். அவர்களுடன் உரையாடுவது, செல்ஃபி எடுத்துக்கொள்வது, அவர்களின் தொழிலை செய்வது என பல வகையில் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறார். 






செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. நேற்று முன்தினம் இந்த யாத்திரை மத்தியப் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி தொண்டர்கள் புடைசூழ ராஜஸ்தான் எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். 










அப்போது அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள  சோயாட் கலான் நகரில் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஏரியாவில் உள்ள கட்டிடத்தில் பாஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அதில், பிரதமர் மோடி மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த கட்டிடம் ஒன்றில் நின்றிருந்த சிலர் மோடி...மோடி என கோஷமிட்டனர். அவர்களை பார்த்த ராகுல் காந்தி சற்றும் யோசிக்காமல் அவர்களுக்கு பறக்கும் முத்தங்களை பரிசளித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.