122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலையை கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியா பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.


வெப்பநிலை பதிவுகள்


ஒரு லேசான புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க மாட்டேன் என்று அடம்பிடித்து தேங்கி நின்றதால் சென்னை ஓரிரு வாரம் ஊட்டி போல குளு குளுவென இருந்தது என்றாலும் ஒட்டுமொத்த இந்தியாவை கணக்கில் எடுத்துக் கொண்டால் வெப்பநிலை வரலாறு காணாத அளவு அதிகமாக இருந்துள்ளது.


டிசம்பர் 2022 இல் நாட்டின் ஒட்டுமொத்த சராசரி அதிகபட்சம், குறைந்தபட்சம் மற்றும் சராசரி வெப்பநிலை முறையே 27.32 டிகிரி C, 15.65 டிகிரி C மற்றும் 21.49 டிகிரி C ஆக இருந்தது. தாழ்வான பகுதிகளில் இந்த அளவு 26.53 டிகிரி C, 14.44 டிகிரி C மற்றும் 20.49 டிகிரி C ஆக இருந்தது. உயரமான பகுதிகளில் குறைந்தபட்ச, அதிகபட்ச மற்றும் சராசரி வெப்பநிலை முறையே 0.79 டிகிரி C, 1.21 டிகிரி C மற்றும் 1.00 டிகிரி C ஆக பதிவாகி இருந்தது. காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இதுபோன்ற பதிவுகள் மேலும் எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை நிபுணர்கள் மற்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்


இந்தியா முழுவதுக்குமான சராசரி அதிகபட்ச வெப்பநிலை, கடந்த டிசம்பரில், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாக இருந்தது. மேலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 2008 க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாக இருந்தது. கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் டிசம்பரில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, 25.85 டிகிரி C ஆக இருந்தது. சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 2008 (12.70 டிகிரி C) மற்றும் 1958 (12.47 டிகிரி C) ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது அதிகபட்சமாக (12.37 டிகிரி C) இருந்தது. சராசரி வெப்பநிலை 19.11 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.


தொடர்புடைய செய்திகள்: Divorce and Maintenance : மனைவி சம்பாதிப்பதால் ஜீவனாம்சத்துக்கு தடையாக கருத முடியாது!: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..


மழையும் குறைவு


மத்திய இந்தியாவில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை ஆறாவது அதிகபட்சமாக (29.49 டிகிரி C) பதிவானது. சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு (16.50 டிகிரி செல்சியஸ்) இரண்டாவது அதிகபட்சமாக (15.88 டிகிரி செல்சியஸ்) பதிவானது. அங்கு சராசரி வெப்பநிலை 22.69 டிகிரி செல்சியஸ் ஆகும். தென் இந்தியாவில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை ஐந்தாவது அதிகபட்சம் மற்றும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மூன்றாவது அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. டிசம்பரில் நாட்டில் பெய்த மழை 13.6 மிமீ ஆகும், இது நீண்ட கால சராசரியான 15.9 மிமீ விட 14% குறைவாகும். வடமேற்கு இந்தியாவில் 83% மழை பற்றாக்குறை இருந்தது; மத்திய இந்தியாவில் 77% மழை பற்றாக்குறை; கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 53% மழை பற்றாக்குறை இருந்தது. மேலும் தென் இந்தியாவில் 79% மழை அதிகமாக பெய்துள்ளது.



என்ன காரணம்?


“டிசம்பர் பிற்பகுதி வரை வடமேற்கு இந்தியாவில் குளிர் அலை அல்லது குளிர் நாள் நிலை இல்லை. இதற்குக் காரணம், வலுவான மேற்குத் தொந்தரவுகள் வடமேற்குப் பகுதியைப் பாதிக்கவில்லை, இது முக்கியமாக குளிர்காலத்தில் வெப்பநிலை வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால், மாதம் முழுவதும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருந்தது. மேலும், மழைப்பொழிவு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டுமே இருந்தது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைவான மழைப்பொழிவே இருந்தது, இதுவே அதிக வெப்பநிலைக்கு வழிவகுத்தது, ”என்று ஐஎம்டியின் இயக்குநர் ஜெனரல் எம் மொகபத்ரா விளக்கினார். 'லா நினா' ஆண்டில் இதுபோன்ற அதிக குளிர்கால வெப்பநிலை அசாதாரணமானது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.


"சராசரி வெப்பநிலையை உயர்த்துவதில் காலநிலை மாற்றம் நிச்சயமாக ஒரு பங்கு வகிக்கிறது. 'லா நினா' ஆண்டுகளில் கூட நாங்கள் இப்போது சாதனை முறியடிக்கும் வெப்பநிலையைப் பார்க்கத் தொடங்கினோம், ”என்று புனேவின் ஐஎம்டியின் காலநிலை கண்காணிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் தலைவர் ஓ.பி.ஸ்ரீஜித் கூறினார்.


"ஆமாம் இது ஒரு லா நினா ஆண்டு, ஆனால் ஐரோப்பா வெப்ப அலையை அனுபவித்து வருகிறது. அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை பதிவு செய்துள்ளனர். எங்கள் டிசம்பர் தரவும் அதையே காட்டுகிறது. புவி வெப்பமடைதல் லா நினாவின் தாக்கத்தை பலவீனப்படுத்தியுள்ளது. டிசம்பரில் வெப்பநிலை அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பதை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும், ”என்று காலநிலை விஞ்ஞானியும் புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளருமான எம் ராஜீவன் கூறினார்.