ரூ.19,744 கோடி மதிப்பீட்டில் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், "ஹைட்ரஜன் மூலம் மாசு இல்லாத எரிபொருள் தயாரிக்கலாம். இதை வாகனங்களில் பயன்படுத்தலாம். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரும்பு ஆலை ஆகியவற்றுக்கு எரிபொருள் ஆதாரமாக பசுமை ஹைட்ரஜன் பயன்படுகிறது. ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான செலவை குறைப்பதற்கு இந்த ஊக்கத்தொகை திட்டம் உதவும்.
ரூ.19,744 கோடி மதிப்பீட்டில், SIGHT திட்டத்திற்கு ரூ.17,490 கோடி, பைலட் திட்டங்களுக்கு ரூ.1,466 கோடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.400 கோடி மற்றும் பிற பணிக் கூறுகளுக்கு ரூ.388 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சகம் (MNRE) அந்தந்த கூறுகளை செயல்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களை உருவாக்கும்.
இத்திட்டத்துக்காக 2030-ம் ஆண்டுக்குள் ரூ.8 லட்சம் கோடி முதலீடு செய்யவும், 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதியை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு குறைப்பதும், பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்" என தெரிவித்தார்.