மனைவி சம்பாதிக்கிறார் என்பதற்காக கணவன் ஜீவனாம்சம் தருவதை தடையாக கருத முடியாது என வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து மனு ஒன்றை பூந்தமல்லியில் இருந்து திருச்சி நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. மேலும் மைனர் குழந்தைகளை பராமரிக்க பெற்றோர் கடமைப்பட்டுள்ளனர். அதற்கான முறையான விண்ணப்பம் இல்லாத பட்சத்தில் நீதிமன்றங்களும் இதனைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இதற்கிடையே மைனர் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்க இடைக்கால பராமரிப்புச் செலவுகளை குழந்தையின் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.






வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வு கூறுகையில், மனைவி அல்லது கணவனுக்கு உரிமைகோருவதற்குப் போதுமான சுதந்திரமான வருமானம் இல்லை என்ற சூழ்நிலையில் இடைக்காலப் பராமரிப்பு உத்தரவு சில நிபந்தனைக்குட்பட்டது. இருப்பினும் மனைவி படித்தவர் என்பது பராமரிப்புக் கோரிக்கையைத் திரும்பப் பெறச் சொல்வதற்கு பதில் இல்லை. ஜீவனாம்சம் இருந்தால்தான் அவர் தன்னையும் தனது குழந்தையையும் ஆதரிக்க முடியும் என்று கூறியுள்ளது. இதனால் மனைவி சம்பாதிக்கிறார் என்பதால் கணவன் ஜீவனாம்சம் வழங்குவதை தடை செய்ய முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. மனைவியைக் காட்டிலும் கணவனுக்குப் பராமரிப்பு அளிக்க வேண்டிய கடமை முக்கியமானது என்றும் அமர்வு கூறியுள்ளது. "பராமரிப்பு என்பது அரசியலமைப்பின் கீழ் மனைவி மற்றும் குழந்தைகள் வறுமைக்குள்ளாவதைத் தடுக்கும் சமூகநீதி அடிப்படையிலான நடவடிக்கையாகும். இந்திய அரசியலமைப்பின் 39 மற்றும் 15(3) பிரிவுகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான சமூகநீதி மற்றும் நேர்மறையான தீர்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன" என்று நீதிமன்றம் கூறியது.


மேலும், "கணவன்-மனைவி இடையேயான மனமுறிவு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, முறையான விண்ணப்பம் ஏதும் இல்லாத நிலையில், இடைக்கால பராமரிப்பு வழங்குவதன் மூலம், மைனர் குழந்தை/குழந்தைகளின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் முக்கியக் கடமையாகும்" என்று நீதிமன்றம் கூறியது.


"தாத்தா பாட்டி தங்கள் மைனர் பேரன் பேத்திகளைப் பார்த்துக்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள், அந்த மைனர் குழந்தைகளின் தந்தை சம்பாதிக்கும் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள். இதை  நீதிமன்றத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது. தந்தையின் பொறுப்பு, இயல்பிலேயே முதன்மையானது. வாழ்க்கைத் துணைவர்களிடையே திருமண தகராறு ஏற்படும்போது, மைனர் குழந்தையை அந்தத் தருணத்தில் பராமரிக்க வேண்டிய அவசியமாக உள்ளது," என்று நீதிமன்றம் மேலும் கூறியது.