உலகெங்கும் பலவாறான இறுதி சடங்குகளை கண்டுள்ளோம். உலகின் பல்வேறு இனங்கள் இறுதி சடங்குகளை அவரவர் பாணியில் கொண்டாடி வருகின்றனர். பாரம்பரியமாக மலையில் வாழும் சில பழங்குடி இன மக்கள் அவர்களுக்கென்று சில வழக்கங்கள் வைத்துள்ளனர். நகரத்தில் வாழும் மக்கள் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நடைமுறைகள் கொண்டு இறுதி சடங்கினை செய்து வருகின்றனர். ஆனால் உலகின் பல பகுதிகள் இறுதி சடங்கை கொண்டாடும் விதம் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும் செய்து வருகின்றனர்.


ஓடிசாவில் ஒரு கிராமத்தில் அப்படி நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்காக நினைவூட்டுகிறோம்.  இறந்த மனிதனை உயிர்ப்பிக்க நினைத்து சில மூடநம்பிக்கைகளில் இறங்கிய அம்மக்கள், அந்த கிராமத்தில் கோயில் திருவிழா நடந்துக்கொண்டிருந்த போது இறந்த ஒருவருக்கு இறுதி சடங்குகளை நிகழ்த்துவதற்கு பதிலாக அவரை மீண்டும் உயிர்ப்பிக்க வைக்க சடங்குகளை செய்து அதிர வைத்தனர். அதிர்ச்சியூட்டிய அந்த சம்பவத்தை கொஞ்சம் பின்னோக்கி சென்று, உங்களுக்கு நினைவூட்டுகிறோம்...



ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கார்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ரபி நஹக். ஒடிசாவில் உள்ள பராசாஹியில் திருவிழா தொடங்கியுள்ளது. இவர் கோயில் திருவிழாவிற்காக இரண்டு நாள் விரதம் இருந்துள்ளார். ரபி நஹக்கின் உடல்நிலை மோசமானதை அடுத்து, அவரை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ரபி நஹக் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்குகளை நடத்துவதற்கு பதில், கிராம மக்களுடன் சேர்ந்து அவரை உயிர்ப்பிக்க சில சடங்குகளையும், பிராத்தனைகளையும் செய்துள்ளனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவர்களின் சடங்குள் முடியும் வரை காத்திருந்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு எடுத்துக்கூறி சடலத்தை அடக்கம் செய்ய வைத்தனர்.



இன்றும் திரைமறைவாக இந்த நிகழ்வு தொடர்வதாக கூறப்பட்டாலும், அதற்கான ஆதாரம் இல்லை. அவர்கள் நம்பிக்கையை கெடுக்கவும் , தடுக்கவும் யாரும் முன் வரவில்லை. இதுபோன்ற இறந்தவர் உயிரை மீட்கும் வகையிலான இறுதிச்சடங்குகள் எகிப்து நாட்டில் இருந்துள்ளது.  அவர்கள் மம்மி என வணங்கும் இறந்தவர்களுக்கு வாய் திறக்கும் நிகழ்வு ஒன்று நடத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு படைக்கப்படும் உணவை அவர்கள் வாய் திறந்து உண்ணுவதாக நம்புகிறார்கள். அதன் மூலம் இறந்த ஆத்மாக்கள் உயிர் பெரும் என்றும் அவர்கள் நம்பிக்கையாக உள்ளது.


இந்தியாவிலும் இறுதிச்சடங்குகளை வித்யாசமாக நிகழ்த்தும் கிராமங்கள் நிறையவே இருந்தாலும், இறுதிச்சடங்கை நடத்தாமல் உயிர் திரும்புவார் என்று நம்பி பூஜை செய்த சம்பவம் அரிதுதான். நாகரிகம் என்னதான் பெரிதாக வளர்ந்து வந்தாலும், படித்தவர்கள் எண்ணிக்கை நாட்டில் உயர்ந்தாலும், அறிவியலில் வித்தியாசமான, வித விதமான கண்டுபிடிப்புகள் வளர்ந்து வந்தாலும், இது போன்ற மூட நம்பிக்கைகள் இன்னும் அழியாமல் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் உள்ளன.