தமிழ்நாட்டை தன் வாழ்நாள் இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சி ஆளவே முடியாது என நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசிய ராகுல் காந்தியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடமிருந்து நான் ஒவ்வொருநாளும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று பேசியதோடு மட்டுமல்லாமல், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வைத்து வரும் கோரிக்கையை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல், அவர்களை உதாசீனப்படுத்தி நிராகரித்து வருவதாகவும் கூறி, தமிழகத்திற்காக மக்களவையில் களமாடியிருக்கிறார் ராகுல்.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவரிடம், ஏன் தமிழ்நாடு பெயரை மட்டும் பல முறை உச்சரித்தீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு, ‘ஏனென்றால் நானும் தமிழன்’ என பதில் அளித்து சென்றிருக்கிறார் ராகுல்.
ஏற்கனவே பல முறை ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தாலும், தமிழ்நாடு பற்றி பல கூட்டங்களில், மேடைகளில், செய்தியாளர் சந்திப்புகளில் பேசியிருந்தாலும், இன்று அவர் மக்களவையில் பேசிய பேச்சுக்குள், பெரும் காரணம் ஒன்று புதைந்திருக்கிறது.
ஆம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட அவர், இந்த முறை தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட நினைக்கிறார். அதன் வெளிப்பாடே ராகுல்காந்தியின் இந்த பேச்சு என்கின்றனர், ராகுலுக்கு நெருக்கமான தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய நபர்கள்.
2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட விரும்பும் ராகுலின் விருப்பத்தை காங்கிரஸ் டெல்லி தலைமை, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துவிட்டதாகவும், அவரும் அதற்கு கண் அசைத்து ஒப்புதல் தந்துவிட்டதாகவும் தகவல் கசிந்திருக்கிறது.
அதன் காரணமாகவே, ’தமிழ்நாட்டை தன் வாழ்நாளில் பாஜக ஆளவே முடியாது’ என்ற வார்த்தையை, அதன் கனம் தெரிந்தே ராகுல் பயன்படுத்தியிருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு, தேனியில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
எனவே, வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தானே நேரடியாக தமிழ்நாட்டில் களம் இறங்க ராகுல்காந்தி முடிவு எடுத்துள்ளார். அப்படி ராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தலைநகரான சென்னையில் இருந்து அருகே இருக்கக் கூடிய தொகுதியைதான் தேர்வு செய்வார் என்கின்றனர் டெல்லி வட்டாரங்கள்.
குறிப்பாக, ராகுல் தான் போட்டியிட தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளை குறி வைத்துள்ளார். ஒன்று தற்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பியாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், இன்னொன்று காங்கிரஸ் வென்ற திருவள்ளூர்.
தனது தந்தையான ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்பதூரில் பரப்புரைக்கு வந்தபோது உயிரிழந்ததால் செண்டிமெண்டாக அந்த தொகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுப்பெற முடிவு எடுத்திருக்கிறார். ஒரு வேளை, அந்த தொகுதியை திமுக கொடுக்க மறுத்தால், திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடலாம் என திட்டமிட்டிருக்கிறார்.
தற்போது திருவள்ளூர் தனித் தொகுதியாக இருந்தாலும், 2009க்கு பிறகு, இந்த முறை நடைபெறக்கூடிய தொகுதி மறுசீரமைப்பில், திருவள்ளூர் பொதுத் தொகுதியாக மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், ராகுல் திருவள்ளூரை குறி வைத்திருப்பதாகவும் தெரிகிறது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் ராகுல் போட்டியிடவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்திருந்தாலும், கடந்த சில நாட்களாகவே இந்த இரு தொகுதிகளையும் மத்திய உளவுத்துறையினர் நோட்டமிடத் தொடங்கியிருக்கின்றனர்.
’நானும் தமிழன் தான்’ என்று சொன்ன ராகுல், விரைவில் அதே தமிழ்நாட்டு மக்களால் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் என குஷியாகியிருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.