இந்தியாவில் சமீப காலமாக புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் இ-சிகரெட் எனப்படும் சாதனம் மூலம் புகைபிடிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இ-சிகரெட் போன்ற புகை பிடிப்பு சாதனங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தடை சட்டம் 2019 முதல் இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது. ஆனால், இ-சிகரெட்டிற்கு தடை இருப்பது பெரும்பாலான இளம் மாணவர்களுக்கு தெரியவில்லை என்று நாடு தழுவிய ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது.
மாணவர்களின் புதிய பழக்கம் புகைப்பிடிப்பது:
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் புகை பழக்கத்திற்கு அடிமை ஆகவே இருக்கின்றனர். சமீப காலமாக இ-சிகரெட் எனப்படும் புகையிலை பயன்படுத்தப்படாமல் அதற்குப் பதிலாக பேட்டரி மூலம் புகையை வெளியேற்றும் சாதனம் தான் இ-சிகரெட். இது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என தற்போது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இ-சிகரெட்டில் குறைந்த அளவு நிக்கோட்டின்தான் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் இதில் அதிக அளவில் சுவையூட்டிகள், நுண் துகள்கள், நுரையீரல் நோயை உண்டாக்கும் ரசாயனங்கள் என பல்வேறு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இதில் உள்ளது. சாதாரண சிகரெட்டுகளை விடவும் பார்ப்பதற்குக் கவர்ச்சியான வடிவங்களில் வருவதாலும் இந்தியச் சந்தையில் மிக எளிதாகக் கிடைக்க கூடியதாகவும் இருப்பதால் இந்திய இளைஞர்கள் இதை விரும்பி புகைக்கின்றனர்.
இந்தியா தழுவிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் :
’திங்க் சேஞ்ச் ஃபோரம்’ என்ற குழு ’போதையற்ற இந்தியாவுக்கான சிந்தனைகள்’ என்ற தலைப்பின் கீழ் டெல்லி, நொய்டா, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் 96 சதவீதம் பேருக்கு இ-சிகரெட் தடை குறித்துத் தெரியவில்லை, 89 சதவீதம் பேருக்கு இ-சிகரெட்டால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து தெரியவில்லை. அதிலும், குறிப்பாக 52 சதவீதம் பேருக்கு இ-சிகரெட் புகை பிடிப்பதின் புதிய வெர்சன் என்றும், இதில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என்றும் கருதுகின்றனர். அதேபோல் 37 சதவீதம் மாணவர்கள் மட்டுமே இதைத் தீங்கு விளைவிப்பதாகக் கருதுகின்றனர். மேலும் 11 சதவீதம் என்ற குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே இதை முற்றிலும் தீங்கு விளைவிப்பதாகக் கருதுகின்றனர். இப்படியான வியக்கத்தக்கத் தகவல் ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.
இ-சிகரெட் குறித்த விழிப்புணர்வு வேண்டும்:
இந்த ஆய்விலிருந்து நாம் அறியக் கூடியவை என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் நிறைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இ-சிகரெட்டியின் தீங்கு குறித்தும் இந்தியாவில் அதன் மீது உள்ள தடை குறித்தும் அறியாமையில் உள்ளனர். குறிப்பாக, 14 முதல் 17 வயதில் உள்ள மாணவர்களுக்கு இதனை பற்றிய முழு தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். இது மாணவர்கள் மத்தியில் இ-சிகரெட் போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைய அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மூலம் நமக்குத் தெரியவருகிறது. மாணவர்களிடையே. இதுகுறித்தான விழிப்புணர்வை முதலில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரிதளவில் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு இ-சிகரெட் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதில் உள்ள தீங்குகளை முறையாகக் கற்பித்து போதை இல்லாத இந்தியா உருவாக்கத் துணை நிற்க வேண்டும்.