தொடரும் கொடூரங்கள்


சமீப காலமாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் மீதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்த காரணத்தால் ஆறு இளைஞர்கள் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் பெயர் மொட நவீன். கடந்த ஜூன் 19ஆம் தேதி, மன்னம் ராமாஞ்சநேயுலு என்பவரும் எட்டு நபர்களும் சேர்ந்து நவீனை தாக்கியுள்ளனர். அதோடு நின்று விடாமல், அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.


வாயில் சிறுநீர் கழித்த கொடூர கும்பல்


அந்த எட்டு பேரில் இருவர் சிறார்கள் ஆவர். ராமாஞ்சநேயுலு, தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவத்தை விவரித்த பிரகாசம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகா கார்க், "ராமாஞ்சநேயுலுவும் நவீனும் நண்பர்கள் ஆவர். ராமாஞ்சநேயுலுவுக்கு வேறொரு நண்பர் ஒருவர் இருந்துள்ளார். அந்த நண்பரின் உறவுக்கார சிறுமியை நவீன காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ராமாஞ்சநேயுலுவுக்கும் நவீனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. சிறுமியுடன் நவீன் வீட்டை விட்டு ஓடியதை அடுத்து, அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் காவல்துறை கஸ்டடியில் வைக்கப்பட்டார்.


இருப்பினும், நவீன் அந்த சிறுமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இது ராமாஞ்சநேயுலு மற்றும் அவரது நண்பர்களை கோபப்படுத்தியது. இதனால், இது அவர்களின் நட்பை மேலும் பாதித்தது. இருவரும் பேசி கொள்ள கூடவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, ராமாஞ்சனேயுலு நவீனை அழைத்தார். மீண்டும் நண்பர்கள் ஆகிவிடலாம் என சொல்லி ராமாஞ்சனேயுலு நாடகமாடியுள்ளார். ஆனால், மது அருந்திய பிறகு, அவரும் அவரது நண்பர்களும் நவீனை தாக்கினர். நவீன மீது அவர்கள் சிறுநீர் கழித்துள்ளார்கள்.


கைது


தாக்குதலைத் தொடர்ந்து, நவீன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், வழக்கை மேற்கொண்டு தொடரவோ அல்லது சிறுநீர் கழித்த சம்பவத்தை காவல்துறையிடம் சொல்லவோ இல்லை. இருப்பினும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


அப்போதுதான், எங்களுக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதில், நவீன் மீது ராமாஞ்சனேயுலுவும் மேலும் சிலரும் சிறுநீர் கழித்தது பதிவாகியிருந்தது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நவீன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை போலீஸார் தானாக முன்வந்து பதிவு செய்தனர். ராமாஞ்சநேயுலுவும் நவீனும் சேர்ந்து பல கடுமையான குற்றங்களைச் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். எனவே, இது ஒரு திட்டமிட்ட சாதிய தீண்டாமை வழக்கு அல்ல. இருவரும் பால்ய நண்பர்கள். போலீசார் ராமாஞ்சநேயுலுவை தேடி வருகின்றனர்" என்றார்.