பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி தனது கட்சி 2024 மக்களவைத் தேர்தலிலும், அதே போல் மாநில சட்டப் பேரவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.






காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கூட்டம் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், மாயாவதி தனது கட்சி, 26 உறுப்பினர்களைக் கொண்ட INDIA கூட்டணியிலோ அல்லது 38 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஜனநாயக்  கூட்டணியிலோ கூட்டணி வைக்காது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டு அமைப்புகளிலிருந்தும் தள்ளி நின்று, வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி, மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருவதாகக் கூறினார். மேலும், "நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தனித்து போட்டியிடுவோம், அதுமட்டுமின்றி ஹரியானா, பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில், அந்த  மாநிலத்தின் பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டம் உள்ளது" என கூறினார்.


காங்கிரஸ் மற்றும் பாஜகாவை விமர்சித்த மாயாவதி, "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட சாதிய மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது என்றும், பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதாகவும், ஆனால் அவர்களின் கொள்கைகள் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக இருப்பதாகவும்” தெரிவித்தார். 


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மயாவதி, ” இந்த கட்சிகள் மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை. பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுகிறார்கள். மக்களுக்காக கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி. இதுவே பகுஜன் சமாஜ் கட்சி எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்காததற்கு மிகப்பெரிய காரணம்”  என குறிப்பிட்டார்.


இந்த மாத தொடக்கத்தில், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான பகுஜன் சமாஜ் கட்சியின்  உத்திகள் குறித்து விவாதிக்க கட்சியின் பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் பிரிவுகளுடன் மாயாவதி ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். மே மாதம், உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அக்கட்சியின் உத்திர பிரதேச  பணியாளர்களுடன் ஆலோசனைக்கு கூட்டத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.