உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி அமைத்தது.






அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியது. இதனால், அப்போது உத்தவ் தாக்கரே அரசு சார்பில் மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் 16 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனியாக பிரிந்து 40 -க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.


இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மார்ச் மாதம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது. சபாநாயகரின் அதிகாரம் தொடர்புடைய நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு உடனடியாக மாற்ற முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 17-ந்தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த வழக்கில் 5 பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு வெளியானது.

அதன்படி இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது என தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் இந்த வழக்கு மூலம் மீண்டும் மீட்டெடுத்திருக்கலாம் என்றும் அவர் வாக்கெடுப்பிற்கு முன்னதாக ராஜினாமா செய்ததால் தற்போது அவரை மீண்டும் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே ராஜினாமா செய்ததால் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், 7பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது.