பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படம் திரையிட மத்திய அரசின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






கடந்த 17-ம் தேதி பிபிசி செய்தி நிறுவனம் பிரதமர் மோடி பற்றி 2 பகுதிகள் கொண்ட ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது. அதில் 2002ல் குஜராத் கலவரத்தின் போது அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும், இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 


இதனையடுத்து இதன் 2-ம் பாகம் கடந்த 24-ம் தேதி வெளியானது. இதில் மனித உரிமை அமைப்பை முடக்கியது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இது பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


 நாட்டில் மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவுகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மேலும், இம்மாதிரியான முயற்சிகள் வெற்றிபெறாது என்றும் கூறியுள்ளார். நாட்டை உடைக்க பல பொய் பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. பாரத அன்னையின் குழந்தைகளிடையே பிளவுகளை ஏற்படுத்த பல பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும், இந்திய மக்களிடையே ஒருபோதும் வேறுபாடுகள் இருக்காது" என்றார்.


'இந்தியா: மோடிக்கான கேள்வி' என்ற தலைப்பில் யூடியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து அதனை பல தளங்களில் இருந்து நீக்கியது . இருப்பினும் தடையை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இதை தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டனர்;


தமிழ்நாட்டிலும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. சில இடங்களில் போலீசார் அனுமதிக்காமல் கைது செய்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் முறைப்படியான அனுமதி பெற்று இந்த ஆவணப்படம் ஒளிபரப்பவும் செய்யப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிபிசி ஆவணப்படம் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி, 2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப் படம் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் எம்எல் சர்மா இந்த பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக எம்.எல்.சர்மா தரப்பு வலியுறுத்தியது. இதனை ஏற்று பிப்ரவரி 6-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.