இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று ‘ஷாஹீத் திவாஸ்’ அல்லது ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் மகாத்மா என்று மரியாதையாக அழைக்கும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நினைவு நாளைக் குறிக்கிறது.


தியாகிகள் தினம்


இந்த தியாகிகள் தினத்தில், ஒடுக்கப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற இந்தியா போராடிய போது தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் (ஜனவரி 30) டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவாக ஜனவரி 30 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. தேசத்தின் தியாகிகளை போற்றும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.



மகாத்மா காந்தி கொல்லப்பட்ட வரலாறு


மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை அகிம்சை அணுகுமுறை மூலம் வழிநடத்தினார். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து ஐந்து மாதங்களில், ஜனவரி 30, 1948 அன்று, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்தியரே சுட்டுக் கொன்றார். இதில் காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புது தில்லியில் உள்ள பிர்லா ஹவுஸ் வளாகத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது அவர் சுடப்பட்டார், துப்பாக்கிச் சூடு அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. அவரை சுட்ட நாதுராம் கோட்சே என்பவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: காலை முதல் சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை! சில மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் மழை இருக்கு! எந்தெந்த மாவட்டம்?


காந்தியின் கொள்கைகள்


அப்போதிருந்து, மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா அந்த நாளை ‘தியாகிகள் தினமாக’ அனுசரிக்கிறது. மகாத்மா காந்தி இன்று உலகம் முழுவதும் அகிம்சையின் அடையாளமாக இருக்கிறார். பல உலகத் தலைவர்கள் அவரை தங்கள் உத்வேகமாக கருதுகின்றனர். மகாத்மா காந்தியின் தத்துவம் மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது: அகிம்சை, சத்தியத்திற்கான போராட்டம் (சத்யாகிரகம்) மற்றும் தனிநபர் மற்றும் அரசியல் சுதந்திரம் (ஸ்வராஜ்) ஆகியவை ஆகும்.



தமிழநாட்டில் விழா


இந்தியா முழுவதும் இந்த நாளை அனுசரிக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தலைமையில் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் நிகழ்வு நடைபெற்றது. அங்கு உள்ள காந்தி அடிகள் சிலைக்கு முதலமைச்சரும் ஆளுனரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.