பிபிசி ஆவணப்படம் தொடர்பாக தான் வெளியிட்ட வீடியோவிற்கு கண்டனங்கள் எழுந்ததையொட்டி மன்னிப்பு கேட்டுள்ளார் மதன் கௌரி


கடந்த 17-ம் தேதி பிபிசி செய்தி நிறுவனம் பிரதமர் மோடி பற்றி 2 பகுதிகள் கொண்ட ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது. அதில் 2002ல் குஜராத் கலவரத்தின் போது அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும், இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  'இந்தியா: மோடிக்கான கேள்வி' என்ற தலைப்பில் யூடியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து அதனை பல தளங்களில் இருந்து நீக்கியது. இருப்பினும் தடையை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். இதை தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டனர்.


இதனையடுத்து இதன் 2-ம் பாகம் கடந்த 24-ம் தேதி வெளியானது. இதில் மனித உரிமை அமைப்பை முடக்கியது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இது பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் பிரபல Youtuber மதன் கெளரி, பிபிசி ஆவணப்பட சர்ச்சை குறித்து வீடியோ ஒன்றை "மோடி அரெஸ்ட் பிபிசி" என்ற பெயரில் வெளியிட்டு இருந்தார்.


அதில் அவர், "என்னை பொறுத்தவரை, நம் வீட்டில் அப்பா - அம்மாவிற்குள் ஏதேனும் தகராறு என்றால், அது அவர்கள்தான் சரி செய்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு மூன்றாவதாக வேறொரு வீட்டில் இருந்து வந்த ஒருவர் சொன்னால் அது நமக்கு அழகல்ல. இது பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியான ஆவணப்படம்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.


மதன் கெளரியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  ஆப்கானிஸ்தான், சிரியா, வட கொரியா என பல நாடுகளை பற்றி கருத்து சொல்லி வரும் மதன் கெளரி இதை பற்றி பேசலாமா பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து பல மீம்களையும் வெளியிட்டு வந்தனர்.






இந்நிலையில் இது தொடர்பாக கண்டனங்கள் வலுத்த நிலையில் தற்போது அதற்கு மன்னிப்பு தெரிவித்து தன் ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார். அதில் ”நான் வெளியிட்ட வீடியோ என் followers பலரை காயப்படுத்தியிருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். உங்கள் எல்லா கருத்துகளையும் படித்தேன். தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த வீடியோ அகற்றப்படும். எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன் என்றும் நான் என்ன சொன்னாலும் சிலர் இன்னும் கோபமாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன், நான் தவறான நிலைப்பாட்டை எடுத்துள்ளேன், என் தவறுகளை திருத்தி அதை என் செயல்களால் நிரூபிப்பேன். ” என்று தெரிவித்துள்ளார்.