அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு அவரது அமலாக்கத்துறை சோதனையை நடத்தி அவர் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, ஜூன் 21 ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.


அமலாக்கத்துறை அவரை கைது செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மனைவியின் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது அதில் இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3 வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த மனு மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அவரும் அமலாக்கத்துறைக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கினார். 


இந்நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை தவறானது என்றும் காவலில் எடுத்து விசாரிக்ககூடாது என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதி போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில், செந்தில் பாலாஜி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கைது செய்தது சரி என்றும், விசாரணை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பின்னடைவாக செந்தில் பாலாஜிக்கு அமைந்துள்ளது.


இந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டபோது கூட, அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தீர்ப்பினால் அமலாக்கத்துறையின் கைகள் விடுவிக்கப்படுள்ளது, அவர் விசாரணை வளையத்திற்குள் விரைவில் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இனி செந்தில் பாலாஜிக்கான வாய்ப்பு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, விசாரணையில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் மட்டுமே உள்ளது என்றும் மற்றப்படி அவரை கைது செய்ததை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க அமலாக்கத்துறைக்கு சாதகமாக வந்துள்ளது. மேலும் 5 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ப்து குறிப்பிடத்தக்கது. 


Rahul Gandhi: போடு வெடிய...! மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்குள் இன்று எண்ட்ரி?