காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரித்து, நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார். 






பதவி நீக்கம் ரத்து:


அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த தண்டனை தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து, ராகுல் காந்தியை மீண்டும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரித்து நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார். இதனால், இன்றே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


காங்கிரஸ் கோரிக்கை:


அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகர் மற்றும் செயலாளரை,  நேரில் சந்தித்து ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட எம்.பி. பதவியை விரைந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.  ஆனாலும்,  ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிகக்ப்படுவதில் இழுபறி நீடித்தது. இதனால், இன்றைக்குள் அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தை நாடவும் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தான், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.


ஸ்டாலின் எழுப்பிய கேள்வி:


இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில் “கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏன் மீண்டும் அவருக்கு வழங்கப்படவில்லை?  அவரை தகுதி நீக்கம் செய்யும்போது காட்டப்பட்ட அவசரம் தற்போது எங்கே? நாடாளுமன்றத்திற்குள் சகோதரர் ராகுல் காந்தி வருவதை நினைத்து பாஜக அஞ்சுகிறதா?” என கேள்வி எழுப்பி இருந்தார். 


வழக்கின் விவரம்:


கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது கர்நாடகாவில் மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில்,  ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அரசு இல்லத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.  தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றமும் ராகுல் காந்தியின் கோரிக்கையை கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்த நாடியபோது தான், அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.