கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முன்னதாக கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்தது. இதையடுத்து மாநில அரசின் தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 10 நாட்களுக்கு மேலாக மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 22ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட இருக்கிறது.
வழக்கை விசாரித்து வரும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி குப்தா ஞாயிற்றுக்கிழமை அன்று ஓய்வு பெறவுள்ளதால், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்த வாதங்களின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இஸ்லாமிய சிறுமிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வருவதைத் தடுப்பது அவர்களின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அவர்கள் வகுப்புகளுக்கு செல்வதை நிறுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான ஆடைகளை அணிய கர்நாடக மாநில அரசு பிப்ரவரி 5, 2022 அன்று தடை செய்தது. இப்பிரச்னை உள்பட பல்வேறு அம்சங்களை வழக்கறிஞர்கள் விசாரணையின்போது எழுப்பினர். இந்துக்கள் அணியும் முக்காடு மற்றும் பொட்டு மற்றும் சீக்கியர்களின் தலைப்பாகையுடன் ஹிஜாப்களை ஒப்பிட்டு வழக்கறிஞர்கள் வாதம் முன்வைத்தனர்.
சில வழக்கறிஞர்கள் இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் வாதிட்டனர். மத நடுநிலையுடன் முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
வழக்கின் கேள்வியும் பதிலும்..
ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா எழுப்பிய கேள்வி பெரும் விவாதத்தை கிளப்பி இருந்தது. விசாரணையின்போது, "நியாயமற்ற முறையில் வாதாட கூடாது. ஆடையை அணியாமல் இருப்பதும் உரிமைதானா" என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தேவ் தட் கமத், "பள்ளிகளில் யாரும் ஆடை அணியாமல் வருவதில்லை" என்றார். வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் இடையே நடைபெற்ற நீண்ட வாத பிரதி வாதத்தின்போது, நீதிபதி குப்தா பேசுகையில், "இங்குள்ள பிரச்னை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தலையில் முக்காடு (ஹிஜாப்) அணிவதை வலியுறுத்தி வருகிறது. மற்ற அனைத்து சமூகங்களும் ஆடை விதிகளை பின்பற்றுகின்றன. மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அது அணிய வேண்டும் இது அணிய வேண்டும் என்று கூறவில்லை" என்றார்.
பல மாணவர்கள் ருத்ராட்சமும் சிலுவை குறி கொண்ட செயினை அணிந்து வருவதாக வழக்கறிஞர் தெரிவித்ததற்கு, "அது சட்டைக்குள் அணியப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை யாரும் சட்டையைத் தூக்கிப் பார்க்கப் போவதில்லை" என நீதிபதி கூறி இருந்தார்.