கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தம்பதியினர் இன்று புல்டோசர் முன் நின்று தங்கள் வீட்டை இடித்தால் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இருப்பினும், நகரத்தில் உள்ள வடிகால்களை அடைத்திருந்த அந்த சட்ட விரோத கட்டிடங்களை மாநகராட்சி அகற்றியது.
பெங்களூரு நகரின் வடகிழக்குப் பகுதியில் பிபிஎம்பி (பெங்களூரு மாநகராட்சி) சட்ட விரோத கட்டிடங்களை இடித்து கொண்டிருந்தபோது, அந்த தம்பதியினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். புல்டோசர் அவர்கள் அருகே சென்றபோது, சோனா சென் மற்றும் அவரது கணவர் சுனில் சிங் ஆகியோர் தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொளுத்தி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
வீட்டிற்கு வெளியே உள்ள சுவரில் ஏறி நின்று கொண்டு மிரட்டிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது, அவர்களில் ஒருவர் பெட்ரோல் பாட்டிலை வைத்திருந்தனர். சமூக வலைதளங்களில் வெளியான பதறவைக்கும் வீடியோவில், சுவரின் மேலே நின்று கொண்டு அவர்கள் தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொள்வதையும், போலீஸ்காரர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை இழுக்க முயற்சிப்பதையும் காணலாம்.
தீக்குச்சியைக் கொளுத்தத் தயாராக இருந்த தம்பதியினர் மீது அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றினர். அக்கம்பக்கத்தினர் மற்றும் மற்றவர்கள் நிதானம் இன்று எதுவும் செய்ய வேண்டாம் என்று தம்பதியினரிடம் கெஞ்சியதுடன், கட்டிடத்தை இடிப்பதை நிறுத்துமாறு மாநகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளை விமர்சித்த தம்பதியினர், தங்கள் வீடு சட்டவிரோதமானது அல்ல என்பதை நிரூபிக்க ஆவணங்கள் இருப்பதாகக் கூறினர். இருப்பினும், அதிகாரிகள் இறுதியாக அவர்களது வீட்டின் ஒரு பகுதியை இடித்தனர். பின்னர், தம்பதியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மழைநீர் வடிகால் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆறு வீடுகளில் தம்பதியரின் வீடும் ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சியின் நிர்வாக பொறியாளர் பாம்பாதி கூறுகையில், மழைநீர் வடிகால் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை மட்டும் இடிக்க போவதாக அவர்களிடம் தெரிவித்தோம்.
ஆனால், அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாவலர்களின் உதவியுடன் இடிக்க தொடங்கினோம். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.
பெங்களூரு முழுவதும் கடந்த மாதம் பெய்த கனமழையால் அலுவலகங்கள், காலனிகள், வெள்ளத்தில் மூழ்கி, நகரின் உள்கட்டமைப்பு முடங்கியதை அடுத்து, மழைநீர் வடிகால்களைத் தடுக்கும் கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.