கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் இயற்கை எழில் கொஞ்சும் சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த கோயில்.


 


பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனும், அதியன் என்ற மன்னனும் போர்க் காலங்களில் இம்மலையில் உள்ள குகைகளை போர்த் தந்திர வேலைகளுக்குப் பயன்படுத்தியதாக திருக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. புகழூர் என்று அழைக்கப்படும் இக்குன்று அமைந்துள்ள இடத்தில் சமண முனிவர்கள் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்ததாகவும், சங்க காலத்தில் இப்படி அடைக்கலம் புகும் இடங்களைப் புகழூர் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.



மேலும் 8-ஆம் நூற்றாண்டில் அரியணையில் அமர்ந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியில் இவ்வூர் "புகழியூர்" என அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் உரைக்கின்றன. ஓர் ஆள் படுப்பதற்கான அளவில் படுக்கை போன்றே செதுக்கப்பட்டிருக்கும் 35-க்கும் மேற்பட்ட இடங்கள் இம்மலையின் குகைகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன. சூடாமணிப் பொந்து என்று அழைக்கப்பட்ட அவற்றைச் சமணர்கள் படுக்கைகளாகப் பயன்படுத்தியதாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.


இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான் இக்கோயில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோயில்களின் கட்டட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்குமாம். இதிலிருந்து இந்தக் கோயிலின் புராதனத்தை அறியமுடிகிறது.


இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். செய்த பாவங்கள் யாவும் தீர்ந்து நல்வாழ்வு அமைய வேண்டி, பக்தர்கள் தங்கள் கையில் வேலோடு இந்தக்  கோயிலுக்கு வருகிறார்கள். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும்.  சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். ஐப்பசி சஷ்டி தினத்தில் தினைமாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம். மழை பெய்ய வேண்டியும், ஊர் ஒற்றுமைக்காகவும் இக்கோயிலின் 315 படிகளுக்கும் நெய் தீபம் அல்லது சூடமேற்றி படி பூஜை செய்வது வழக்கம். தைப்பூச தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இளநீர்க் காவடி எடுத்து வந்து, முருகப்பெருமானை தரிசித்துச் செல்கின்றனர். சூரசம்ஹாரமும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை தினத்தில் மூன்று வேளையும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இக்கோயிலில் அன்னதானம் செய்து வழிபட்டால் குடும்பம் செழித்தோங்கும் என நம்பப்படுகிறது.




ஆண்டுதோறும் தை பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாவில் பிரம்மாண்டமான தேர் புறப்பட்டு ஆலயம் வலம் வரும் இந்த தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


குறிப்பாக - இரண்டு நாள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் தமிழக பாரம்பரிய நடனமான குச்சிப்புடி, ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனங்கள் இங்கு பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவது வழக்கம். கரூர் அருகே மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான புகழிமலை பாலசுப்ரமணிய ஆலயம் பற்றி இன்னும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் உள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ஆன்மீக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.