கேரளாவின் வடக்கன்சேரி பகுதியில் இன்று அதிகாலை 12 மணியளவில் பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் உள்பட 42 பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஊட்டிக்கு சென்றது. அப்போது வடக்கன்சேரி வாலையாறு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 






இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அனைவரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் விபத்து குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதன்படி இரவு நேரத்தில் கேரளாவிலிருந்து ஒரு தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஊட்டிக்கு சுற்றுலா செல்ல இந்தப் பெருந்து கிளம்பியுள்ளது. அப்போது வடக்கன்சேரி பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சரியாக 12 மணியளவில் வந்துள்ளது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த காரை முந்த அந்தப் பேருந்து முயற்சி செய்துள்ளது. அந்த சமயத்தில் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேருந்தும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளன. 


இந்த அரசு பேருந்து கேரளாவின் கோட்டாரகராவிலிருந்து கோயம்பத்தூர் சென்று கொண்டிருந்தப் போது விபத்தில் சிக்கியுள்ளது. சுற்றுலா பேருந்தில் தனியார் பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்  மாணவர்கள் இருந்துள்ளனர். தற்போது வரை இவர்களில் 16 பேர் காயங்களுடன் திருச்சூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உத்தரகாண்ட் பேருந்து விபத்து.. 25 பேர் பலி..:


உத்தரகாண்ட் பகுதியில் மலைப் பகுதிகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று முன் தினம் இரவு 50 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் தற்போது வரை இந்த விபத்தில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார், “பவுரி கர்வால் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தற்போது வரை 21 பேரை மீட்டுள்ளனர். அத்துடன் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.