ஒடிஷா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்து சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார். விபத்து நடந்த வழிதடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சம் நடைமுறையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோர விபத்து:
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தன இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மீட்பு பணிகள்:
இந்த கோர விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 7 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 5 குழுக்கள், தீயணைப்பு பிரிவை சேர்ந்த 24 குழுக்கள், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து நடத்த இடத்துக்கு பிரதமர் மோடி இன்று செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, இந்த விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது, அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கவாச் பாதுகாப்பு அம்சம்:
இந்நிலையில் ஒடிஷா ரயில் விபத்து மீட்பு பணிகள் நிறைவடைந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விபத்து நடந்த வழிதடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சம் நடைமுறையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கவாச் பாதுகாப்பு அம்சம் என்பது இரு ரயில்கள் மோதிக்கொள்ளாமல் இருக்க அமைக்கப்படும் தடுப்பு கருவியாகும். இந்த கருவியானது இரண்டு ரயில்கள் மோதுவது போல் வந்தால் சுமார் 380 மீட்டர் தொலைவிலேயே வண்டியை நிறுத்திவிடும். மேலும் சிவப்பு சமிக்ஞை விளக்கு இருந்தால் ஓட்டுநர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே, என்ஜின் செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டுமல்லாமல் இணைப்பு பாதைகள் வரும் போது ரயில் வண்டியின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைக்கும்.