விபத்துக்குள்ளான கோரமண்டல விரைவு ரயிலில், சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்று தெற்கு ரயில்வே கோட்ட மேலாளார் கணேஷ் தெரிவித்திருக்கிறார்.
கோர விபத்து
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக மாநில, தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிசாவில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதுவரை 280 பேர் உயிரிழப்பு
மேலும் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் இதுவரை இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விளக்கம்
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ”விபத்துக்குள்ளான கோரமண்டல விரைவு ரயிலில், சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர். காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். முன்பதிவு விவரங்களை வைத்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், எத்தனை பேர் தடம் புரண்ட பெட்டியில் இருந்தனர் என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அதனைப் போலவே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் எத்தனை பேர் பயணித்தனர் என்று தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த விபத்தில் 280 பேர் தற்போது வரை உயிரிழந்த நிலையில், மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் படிக்க