ராஜஸ்தானில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரின் வாழ்க்கையை நெட்டிசன்கள் சேர்ந்து மாற்றிய சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சமீப நாட்களாக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பலர் பைக் பயன்படுத்தாமல் சைக்கிளில் வருவது வழக்கமாகி இருக்கிறது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உணவு டெலிவரி செய்யும் பலர் பைக்கிற்கு பதிலாக சைக்கிளில் டெலிவரி செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பெங்களூரில் சிறிய அளவிலான பேட்டரி பைக்குகளில் பலர் டெலிவரி செய்வது வழக்கமாகி உள்ளது. பலர் பெட்ரோல் விலை உயர்வால், பொருளாதார நிலையால் சைக்கிளில் டெலிவரி செய்கிறார்கள். ஆனால் உரிய நேரத்தில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்வது என்பது மிகவும் கடினம். இந்த நிலையில்தான் இப்படி சைக்கிளில் டெலிவரி செய்யும் டெலிவரி பாய் ஒருவருக்கு நெட்டிசன்கள் இணைந்து உதவி செய்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் ஆதித்யா சர்மா, இவர் சமீபத்தில் சோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவு ஆர்டர் செய்து டெலிவரி நேரத்திற்கு முன்பாக அவருக்கு உணவு டெலிவரி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் வியப்பு என்னவென்றால், அந்த உணவு டெலிவரி செய்த துர்கா மீனா என்ற நபர் அதை சைக்கிளேயே வந்து டெலிவரி செய்துள்ளார். ராஜஸ்தானில், கோடை காலத்தில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையில் இவர் வந்து உணவை உரிய நேரத்தில் டெலிவரி செய்துள்ளார். துர்கா மீனாவிற்கு 31 வயதாகிறது. கடந்த 4 மாதமாக உணவு டெலிவரி செய்து வருகிறார். கடும் வெயிலில் சைக்கிளில் வந்தது வாடிக்கையாளரான ஆதித்யா சர்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் வாடிக்கையாளர் ஆதித்யா சர்மா, தனது சமூகவலைதள பக்கத்தில் zomato டெலிவரி ஏஜென்ட் 'துர்கா சங்கர் மீனா' பற்றி பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். இதைக் கண்ட சமூகவலைதள பயனர்கள் கடும் வெயிலில் சைக்கிள் பயணம் செய்ய வேண்டாம் இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
சைக்கிளில் டெலிவரி செய்யும் துர்கா மீனா மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் இதற்கு முன் ஆசிரியராக இருந்தார். 12 வருடம் ஆசிரியர் பணியில் இருந்துள்ளாராம். ஆங்கிலம் நன்றாக பேச கூடிய துர்கா மீனா ஆங்கில வகுப்புகளை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் இவருக்கு வேலை போனதால் இப்படி உணவு டெலிவரி வேளைக்கு வந்து இருக்கிறார். பி காம் படித்த இவர் எம் காம் படிப்பதற்காக காசு சேர்த்து வருகிறார். அதோடு டெலிவரி செய்ய வசதியாக பைக் வாங்குவதற்கும் இவர் காசு சேர்த்து வருகிறார். இந்த நிலையில் உணவை பெற்றுக்கொண்ட ஆதித்யா. டெலிவரி செய்ய வந்த துர்கா மீனாவிடம், பைக் வாங்க எவ்வளவு தேவை என்று கேட்டு இருக்கிறார். அதற்கு "எனக்கு முன் பணம் மட்டுமே தேவை. மற்றபடி இஎம்ஐ நானே கட்டிவிடுவேன், அதன்பின் முன்பணத்தையும் வட்டியோடு கொடுத்துவிடுவேன்" என்று கூறி இருக்கிறார் துர்கா மீனா.
ஆனால் ஆதித்யாவோ அவருக்கு மொத்தமாக பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று நினைத்து இருக்கிறார். இதையடுத்து ஆதித்யா சர்மா இணையத்தில் நெட்டிசன்களிடம் உதவி கேட்டு உள்ளார். அவருக்கு பைக் வாங்க 75 ஆயிரம் ரூபாய் தேவை. 75 ஆயிரம் பேர் 1 ரூபாய் அனுப்பினால் போதும், துர்கா மீனாவிற்கு புதிய பைக் வாங்க முடியும் என்று ஆதித்யா சர்மா ட்விட் செய்துள்ளார். அதோடு இதற்கான வங்கிக் கணக்கையும் கொடுத்துள்ளார். இதை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பலர் உதவி செய்ய முன் வந்துள்ளனர். தொடர்ச்சியாக பலர் 100, 200 என்று பணம் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் மறுநாளே தேவையான 75 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த டெலிவரி பாய் துர்கா மீனாவிற்கு ஆதித்யா சர்மா புதிய பைக்கை வாங்கி கொடுத்துள்ளார். அவரை ஷோ ரூமிற்கு அழைத்து சென்று நல்ல மைலேஜ் தர கூடிய ஹீரோ பைக்கை வாங்கி கொடுத்துள்ளார். உணர்ச்சிவசப்பட்டு துர்கா மீனா ஆதித்யாவை கட்டி அணைத்துக்கொள்ளும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது. வெறுப்புகளாலும் வன்மங்களாலும் நிரம்பிய சமூக வலைதளங்களில் இது போன்ற விஷயம் அவ்வபோது கோடைமழைபோல் நிகழ்ந்து அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.