பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோன சம்பவத்தில் அங்கு பணிபுரிந்த செவிலியரையும், அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.


பாலிவுட் திரைப்படங்களில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் உள்ள அம்ரிதா மார்க்கில் இருக்கும் வீட்டில் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் வசித்து வருகிறார். தற்போது சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள இவரின் வீட்டில் இருந்த ரூ. 1.41 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சோனம் கபூர் மாமியார் இந்த திருட்டை கண்டுபிடித்தார். உடனே இது குறித்து காவல் துறையில் புகார் செய்துள்ளனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு இந்த திருட்டு குறித்து விசாரித்து வந்த நிலையில் அவரது நர்ஸையும், நர்ஸின் கணவரையும் கைது செய்துள்ளனர்.



சோனம் கபூர் வீட்டில் வேலை செய்யும் 25 வீட்டு வேலைக்காரர்கள், 8 டிரைவர்கள், தோட்ட பராமரிப்பாளர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரனை நடைபெற்றது. திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்ப நாய்களின் துணையோடு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. ஆதாரங்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் வீட்டில் பணிபுரிந்து வரும் செவிலியரான அபர்ணா ரூத் வில்சன் என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவரும், அவரது கணவர் நரேஷ் குமாரும் இணைந்து இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



சோனம் கபூரின் அத்தை பிரியா அஹுஜா கடந்த மாதம் பிப்ரவரி மாதம் தனது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கணக்கிட்டுப்பார்த்த போதுதான் திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இத்திருட்டு குறித்து பிப்ரவரி 23-ம் தேதி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் இத்திருட்டு குறித்து ரகசியமாக விசாரித்து வந்தனர். தற்போது இத்திருட்டு குறித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடைசியாக பிரியா தனது நகைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோதனை செய்திருந்தார். அதன் பிறகு சோதனை செய்யவே இல்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வந்த நிலையில் திருடியவர்களை ஒரு வழியாக கண்டுபிடித்துள்ளது காவல்துறை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோனம் கபூர் மாமனார் கம்பெனியில் 10 பேர் சேர்ந்து 27 கோடி ரூபாய் மோசடி செய்தது குறிப்பிடதக்கது.