ரயில்வே சிக்னல் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.


ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதேநேரம், விபத்து நிகழ்ந்த இடத்தில் துரித கதியில் மறுசீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தது. தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டன. விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்ட நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திலேயே கடந்த 3 தினங்களாக இருந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். அதோடு, புதன்கிழமைக்குள் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.


தண்டவாளங்களில் சேதமடைந்த பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதேபோல் மின் இணைப்புகள் மற்றும் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் சுமார் 51 மணி நேரத்தில் முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட பகுதியில் முதலில் சரக்கு ரயில் பயணம் மேற்கொண்டது.






இந்நிலையில், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் ரயில் பாதையில் இருக்கும் சிக்னல் அமைப்பின் குறைபாடுகள் குறித்து பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருந்தார். அதில் சிக்னல் பிரச்சனை மற்றும் பாதையில் மாற்றம் ஏற்படும் அமைப்பில் இருக்கும் கோளாறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி  வேனுகோபால்,  கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஒடிஷா ரயில் விபத்திற்கு முழு காரணம் மத்திய அரசு தான் என குறிப்பிட்டுள்ளார்.


இது போன்ற சுழலில், ரயில்வே சிக்னல் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது. கோளாறுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டபுள் லாக்கிங் உள்ளிட்ட மற்ற உபகரணங்களை பரிசோதனை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. ஒடிஷா கோர ரயில் விபத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.