கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பிக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இருந்து மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் பின்வாங்கியதாக தகவல் வெளியானது. போராட்டத்தை கைவிட்ட அவர், பணிக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. 


போராட்டத்தை கைவிட்டாரா சாக்‌ஷி மாலிக்?


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள், இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தனர். இந்த சூழலில், போராட்டம் மேற்கொண்டு வருபவர்களில் முக்கியமானவராக கருதப்படும் சாக்‌ஷி மாலிக், அதை கைவிட்டுவிட்டு ரயில்வேஸில் தன்னுடைய பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியானது. 


இதையடுத்து, போராட்டத்தை கைவிடவில்லை என சாக்‌ஷி மாலிக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் அளித்த விளக்கத்தில், "இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, நாமும் பின்வாங்க மாட்டோம். சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என குறிப்பிட்டிருந்தார்.


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி பிரஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத், சங்கீத்போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.


அமித் ஷா சந்திப்பை தொடர்ந்து பரவிய பொய் செய்திகள்:


இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரஜ் பூஷண் சரண் சிங் கலந்து கொண்டதால் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தடையை மீறி மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயற்சித்தனர். 


அப்போது, காவல்துறை தடுப்புகளை தாண்டி அவர்கள் பேரணியை தொடர முயன்ற போது அவர்களை காவல்துறை சிறைபிடித்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அப்பகுதி களேபரமாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர்களான வினேஷ் போகாத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் இந்த கைது நடவடிக்கைக்கு ஆளாகினர்.


இதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மல்யுத்த வீரர்கள் அடங்கிய குழு, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதாக பொய் செய்திகள்  பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.