ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் யாஷ தயாளின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரும் சர்சையை கிளப்பியதால் அதனை உடனே நீக்கியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான பதிவைப் பகிர்ந்தார். லவ் ஜிகாத் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தினை ஆதரிக்கும் வகையில் இருந்த அந்த ஸ்டோரி மிகவும் பரபரப்பான டாப்பிக்காக மாறியதால் உடனே அந்த ஸ்டோரியை நீக்கினார் யாஷ் தயாள். ஆனால் அதற்குள் அவரை பின் தொடரும் பலரும் அவரது ஸ்டோரியை ஸ்கீரின் ஷாட் எடுத்து சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
யாஷ் தயாளின் சர்ச்சைக்குரிய அந்த பதிவு ஒரு கார்டூன் படம். அதில் தலையில் குல்லா அணிந்த அப்துல் என்ற பெயர்கொண்ட ஒருவர் தனது இடது கையில் கத்தியை தனது முதுகுப்பின் மறைத்து வைத்துக்கொண்டுள்ளார். துணியால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் முன்னர் 15 இந்து மத பெயர்கள் கொண்ட பெண்களின் கல்லறயும் ஒரு பிணமும் இருக்கிறது. மேலும், “லவ் ஜிகாத் என்பது எல்லாம் பொய். அது திட்டமிட்டு பரப்பபடும் வெறுப்பு பிரச்சாரம் என அந்த இஸ்லாமிய ஆண் சொல்வது போன்றும், நான் உன்னை நம்புகிறேன் அப்துல், நீ மற்றவர்கள் போல் இல்லை. உன்னை நான் கண்மூடித்தனமாக நம்புகிறேன் என கூறுவது போன்றும் உள்ளது.
உடனே அந்த பதிவை நீக்கிய யாஷ் தயாள், அந்த ஸ்டோரி தவறுதலாக போடப்பட்டு விட்டது. அதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன். இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்தையும் நான் பெரிதும் மதிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் யாஷ் தயாளின் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டா ஸ்டோரியில் இருந்து நீக்கப்பட்ட இந்த பதிவுக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் ஃபைர் விட, இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியவர் தான் யாஷ் தயாள். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவரது பந்தில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெறச்செய்தார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் மட்டும் விளையாடிய இவர் இரண்டு விக்கெட்டுகள் மட்டும் தான் கைப்பற்றினார்.