மணிப்பூரில் நேற்று முழு அடைப்பு போராட்டத்தால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
மணிப்பூரில் மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே கடுமையான கலவரம் தொடங்கியது. கடந்த 6 மாத காலங்களாக கலவரம் நீடித்து வருகிறது. இரு பிரிவினர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டதோடு, பொருட்களை சூறையாடுதல், வீடுகளை தீயிட்டு கொளுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகின. மணிப்பூர் கலவரத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஐ.ஜி முய்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும் வதந்திகளுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி, இணைய சேவை முடக்கப்பட்டது. அரசு ஒப்புதல் பெறப்பட்ட மொபைல் எண்களை தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 140 நாட்களாக இணைய சேவை இன்றி மணிப்பூர் மக்கள் தவித்து வந்தனர். அதனை தொடர்ந்து மணிப்பூரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் வெளியிட்டார். மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சில இடங்களில் மட்டும் இணைய சேவை வழங்க உத்தரவிட்டது.
இப்படி பல மாதங்களாக இந்த இனக்கலவர்ம தீர்ந்தபாடு இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன் போலீஸ் சீறுடையில் இருந்த 5 பேர் கைது செய்ப்பட்டனர். ஆனால் அவர்கள் தன்னார்வலர்கள் என்றும் அவர்களின் கைதுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கைதானவர்களின் போராட்ட குழுவினரை சேர்ந்தவரும் இருந்ததால் 5 போராட்ட குழுவினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி உள்பட 5 தடை செய்யப்பட்ட பிரிவினர்கள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதனால் மணிப்பூரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், சந்தைகள் ஆகியவை மூடப்பட்டது. மருந்தகம், மருத்துவமனை மற்றும் அடிப்படை தேவைகளுக்கான விஷயங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.
இதனிடையே தொடர்ந்து கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தின், தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனை பணியிடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கே தன்னை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற முரளிதரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க, கடந்த ஏப்ரல் மாதம் எம்.வி. முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து தான் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே கலவரம் வெடித்தது. இதனால், தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரனுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Crime: இப்படியும் ஏமாத்துவாங்க; நம்பிடாதீங்க! மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்! - எச்சரிக்கும் போலீஸ்!